வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலம் சுண்ணாம்புக்கல் சரக்குகளை இந்தியாவிற்குக் கொண்டு வர, 42 லட்சம் ரூபாய் சரக்கு புக்கிங் கட்டணம் வசூலித்துக்கொண்டு மோசடி செய்த இந்தோனேசிய நிறுவன ஊழியரை சேலம் காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள மேச்சேரி இந்திரா நகரைச் சேர்ந்தவர் ஐயப்பன். இவருடைய மனைவி பூவிழி (40). இவர், வெளிநாடுகளில் இருந்து சுண்ணாம்புக்கல் இறக்குமதி செய்து வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம், துபாய், பிலிப்பைன்ஸ் நாடுகளில் இருந்து சுண்ணாம்புக்கல் இறக்குமதி செய்ய ஏற்பாடு செய்தார். அங்கிருந்து கப்பலில் சரக்குகளைக் கொண்டு வருவதற்காக ஆன்லைன் மூலம் இந்தோனேசியா நாட்டைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டார்.
அந்த நிறுவனத்தினரும், சுண்ணாம்புக்கல் சரக்குகளை காரைக்கால் துறைமுகத்திற்குக் கப்பலில் கொண்டு வந்து இறக்கிவிட ஒப்புக்கொண்டு, 42.42 லட்சம் ரூபாய் கட்டணம் வசூலித்தனர். இந்தக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் கடந்த ஜனவரி மாதம் பூவிழி செலுத்தினார். சரக்கு புக்கிங் செய்த நிறுவனம், அதன்பிறகு பூவிழியை தொடர்பு கொள்ளவே இல்லை. சரக்கும் குறிப்பிட்ட நாளில் வந்து சேரவில்லை. இதுகுறித்து பூவிழி தரப்பில் விசாரித்தபோது, இந்தோனேசியாவைச் சேர்ந்த அந்த நிறுவனத்தார் திட்டமிட்டு மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர், சேலம் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்தார். சரக்கு புக்கிங் செய்த இந்தோனேசிய நிறுவனத்தின் கிளை கொல்கத்தாவில் இயங்குகிறது. அங்கு மேலாளராக பணியாற்றி வந்த எஸ்.சி.ஜனா (45), ஊழியர்கள் எம்.சி.குண்டு, ஆர்.கே.நாக், தீபக் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அவர்களைத் தேடி வந்தனர்.
இவர்களில் எஸ்.சி.ஜனா கொல்கத்தாவில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அங்கு விரைந்த சேலம் மாவட்டக் காவல்துறையினர் அவரை சுற்றி வளைத்துக் கைது செய்தனர். விசாரணையில், பூவிழியிடம் மோசடியாக பெற்ற பணம், இந்தோனேசியாவில் உள்ள தீபக்கிடம் கொடுத்து வைத்திருப்பது தெரியவந்தது. ஜனாவை காவல்துறையினர் சேலம் மூன்றாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். வழக்கில் தொடர்புடைய தீபக் உள்ளிட்ட மூவரை தேடி வருகின்றனர்.