கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று நேற்று முன்தினம் இரவு சுமார் 10 மணி அளவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு அரியலூர் மாவட்டம் இடையக்குறிச்சி வழியாகச் சென்று கொண்டிருந்தது. நடத்துனர் பயணிகளிடம் டிக்கெட் கொடுத்துக் கொண்டு வந்தார். அப்போது 25 வயது வாலிபரிடம் டிக்கெட் எடுக்குமாறு நடத்துனர் கூற, ஆனால் டிக்கெட் எடுக்காமல் அந்த வாலிபர் நடத்துனரிடம் தகராறு செய்துள்ளார்.
அந்த சமயத்தில், பேருந்து கருவேப்பிலங்குறிச்சி காவல்நிலையம் அருகில் வந்தது. உடனே ஓட்டுநர் பேருந்தில் இருந்து இறங்கி, காவல்நிலையத்திற்கு சென்று, தகராறு செய்த வாலிபர் குறித்துப் புகார் செய்துள்ளார். இதைப் பார்த்து மிரண்டு போன அந்த வாலிபர், பேருந்திலிருந்து குதித்து ஓடி அருகில் உள்ள குளத்தில் குதித்து தப்பி ஓடி உள்ளார். இந்தத் தகவலறிந்த போலீசார் அந்தக் குளத்தை சுற்றிலும் தேடிப் பார்த்தனர். ஆனால், அந்த இளைஞரை காணாததால் சந்தேகம் அடைந்த போலீசார், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். விருத்தாசலத்தில் இருந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் குளத்தில் இறங்கி வாலிபரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்படியும் வாலிபர் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், நேற்று காலை குளக்கரையின் அருகில் ஒரு வாலிபர் உள்ளாடையுடன் உட்கார்ந்திருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் விரைந்து சென்று அந்த இளைஞரைப் பிடிப்பதற்கு முயற்சி செய்தனர். அதற்குள் அவர் அங்குள்ள விவசாய நிலத்தில் இறங்கி தப்பித்து ஓடி தலைமறைவு ஆகிவிட்டார். தப்பி ஓடிய வாலிபர் குறித்து போலீசார் விசாரித்த போது, அவர் அரியலூர் மாவட்டம் அழகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும் நேற்று முன்தினம் பேருந்தில் தகராறு செய்து விட்டு டிக்கெட் எடுக்காமல் குளத்தில் குதித்து தப்பி ஓடியவர் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மீண்டும் அந்த இளைஞரை போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.