சிவகாசி அருகிலுள்ள சித்துராஜபுரத்தைச் சேர்ந்த சுசீந்திரனின் மனைவி ஷீலா ராணி, பியூட்டிசியன் வேலை பார்த்து வந்தார். கடந்த 4 ஆம் தேதி வீட்டிலிருந்து கிளம்பிச் சென்றவர் திரும்பி வராத நிலையில், அவர் காணாமல் போனது குறித்து சிவகாசி கிழக்கு காவல்நிலையத்தில் வழக்குப் பதிவாகி காவல்துறையினர் தேடி வந்தனர்.
இந்நிலையில், திருத்தங்கல் – விருதுநகர் சாலையிலுள்ள மாநகராட்சிக் குப்பைக் கிடங்கு அருகிலுள்ள கிணற்றில் ஷீலா ராணி பிணமாகக் கிடந்தார். அவரது உடலைத் தீயணைப்புத்துறையினர் உதவியுடன் காவல்துறையினர் மீட்டனர். ஷீலா ராணியைக் கொலை செய்ததாக அவருடைய நண்பர் ஷேக் முகமது யாசின் கைது செய்யப்பட்டுள்ளார்.
என்ன நடந்தது?
5 ஆண்டுகளுக்கு முன் ஷேக் முகமது யாசினும் ஷீலா ராணியும் ஒரே இடத்தில் வேலை பார்த்தபோது பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால், ஷீலா ராணிக்கு அடிக்கடி பணம் தந்து உதவியிருக்கிறார். தற்போது ஷீலா ராணி வேறொரு நண்பருடன் பழகியதை அறிந்த ஷேக் முகமது யாசின், ஏற்கனவே கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டுள்ளார். சிவகாசியில் தனியார் கொரியர் நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலை பார்க்கும் ஷேக் முகமது யாசின், கடந்த 4 ஆம் தேதி ஷீலா ராணியைக் காரில் அழைத்துச் சென்றுள்ளார்.
காரில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ஷேக் முகமது யாசின், ஷீலா ராணியைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்து, திருத்தங்கல் மாநகராட்சிக் குப்பைக் கிடங்கு அருகிலுள்ள கிணற்றில் உடலை வீசிவிட்டுச் சென்றுள்ளார். சிவகாசி கிழக்கு காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தியபோது, ஷீலா ராணியைக் கொலை செய்தது குறித்து மேற்கண்டவாறு வாக்குமூலம் தந்திருக்கிறார் ஷேக் முகமது யாசின்.