ஈரோடு மதுவிலக்கு துணை கண்காணிப்பாளர் சண்முகம் தலைமையில் மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். சட்டவிரோதமான மது விற்பனை, புகையிலைப் பொருட்கள் விற்பனை போன்றவற்றை கண்டுபிடித்து அதற்கு காரணமானவர்களை கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோடு மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட ஈரோடு மாதவ கிருஷ்ணா வீதியில் உள்ள ஒரு இனிப்பு கடையில் கஞ்சா சாக்லேட் விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு துணை கண்காணிப்பாளர் சண்முகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சண்முகம் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட இனிப்பு கடைக்கு அதிரடியாக சென்று சோதனையிட்டனர். அப்போது இனிப்பு கடையில் கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருப்பது தெரிய வந்தது. கிட்டத்தட்ட 5 கிலோ கஞ்சா சாக்லேட்டை மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பாகதூர் (64) என்பவரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். கடையிலிருந்து 5 கிலோ கஞ்சா சாக்லேட்டை மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.