சங்ககிரி அருகே, குடிபோதையில் வீட்டுக் கதவைத் தட்டி பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நெசவுத்தொழிலாளியை அடித்துக் கொலை செய்ததாக, கணவர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த கஸ்தூரிப்பட்டி அருகே உள்ள பாலமலையான் காட்டைச் சேர்ந்தவர் மாரிமுத்து (52). நெசவுத்தொழிலாளி. இவருக்கு மதுபானம் குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் அவருடைய மனைவி பல ஆண்டுக்கு முன்பே பிரிந்து சென்று விட்டார். இதையடுத்து மாரிமுத்து, தனது தாயார் குப்பாயியுடன் வசித்து வருகிறார்.
இவர் அடிக்கடி மது போதையில் அந்தப் பகுதியில் வசிக்கும் பெண்களிடம் ஆபாசமாகப் பேசி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்து அவருடைய தாயாரிடம் பலரும் புகார் அளித்து, எச்சரிக்கை செய்துள்ளனர். ஆக. 23ம் தேதி அதிகாலை 4.30 மணியளவில், குடிபோதையில் இருந்த மாரிமுத்து, உள்ளூரைச் சேர்ந்த சண்முகம் (41) என்பவரின் வீட்டுக்கதவை தட்டியுள்ளார். சத்தம் கேட்டு எழுந்த வந்த சண்முகத்தின் மனைவி கவிதா (34), எதற்காக இந்த நேரத்தில் கதவைத் தட்டி தொந்தரவு செய்கிறீர்கள் எனக்கூறி, திட்டியுள்ளார்.
அப்போதும் போதை தெளியாமல் இருந்த மாரிமுத்து, கவிதாவின் கையைப் பிடித்து இழுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சல் போட்டார். அலறல் சத்தம் கேட்டு அவருடைய கணவர் சண்முகம், இவருடைய தம்பி பூபதி ஆகியோர் எழுந்து வந்துள்ளனர். அக்கம்பக்கத்தில் வசிக்கும் அவர்களுடைய உறவினர்கள் ராஜமாணிக்கம், குமார் ஆகியோரும் அங்கு வந்தனர். அவர்கள் மாரிமுத்துவை சரமாரியாகத் தாக்கினர். அவர்களின் பிடியில் இருந்து நழுவிய மாரிமுத்து, தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு தப்பிக்க முயன்றார்.
அப்போதும் ஆத்திரம் தணியாத அந்தப் பெண் தரப்பினர், அவரை துரத்திச் சென்று மேலும் சரமாரியாகத் தாக்கினர். இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த மாரிமுத்து அங்கேயே மயங்கி சரிந்து விழுந்தார். அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அவரை மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர உயிரிழந்தார்.
இதுகுறித்து மாரிமுத்துவின் அண்ணன் மகன் மோகன்ராஜ் (32) சங்ககிரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தனது சித்தப்பாவை சண்முகம் (36), பூபதி (33), சண்முகத்தின் மனைவி கவிதா (34), உறவினர்கள் குமார் (35), ராஜமாணிக்கம் (45) ஆகியோர் அடித்துக் கொன்று விட்டதாகக் கூறியிருந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்டக் காவல்துறை எஸ்.பி. அருண் கபிலன் தலைமையிலான காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்தனர். அவர்கள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரித்தனர்.
இந்த சம்பவம் குறித்து சங்ககிரி காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, புகாரில் கூறப்பட்ட 5 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.