
கள்ளக்குறிச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள் போலீஸ் துணையுடன் தங்களை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்து மிரட்டுவதாக மாவட்ட ஆட்சியரிடம் ஒரு குடும்பத்தினர் புகாரளித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த சவேரியார் பாளையம் ஏரி கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ஜேக்கப் (36). இவருக்கு மனைவி மகள் மற்றும் மகன் உள்ளனர். நேற்று இவர்களுடன் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த ஜேக்கப் அவர் கையில் 5 லிட்டர் மண்ணெண்ணெய் கேனுடன் வந்ததை பார்த்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடமிருந்த மண்ணெண்ணெய் கேன் பறிமுதல் செய்தனர்.
பிறகு அவரிடம் விசாரித்தபோது, தனது குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்; அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; இல்லையேல் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறி உள்ளார்.
மேலும் அவர் கூறும்போது, "கடந்த 2018 ஆம் ஆண்டு சவேரியார் பாளையம் பகுதியில் கிணற்று மேட்டுப் பகுதியில் வீடு கட்டும் பணிக்காக மண்ணை எடுத்தேன். அது தவறு எனக் கூறி அந்த ஊரை சேர்ந்த சிலர் என்னைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததோடு 50,000 அபராதம் விதித்தனர், பிறகு அதை 15 ஆயிரம் ரூபாயாக குறைத்தனர். இதன் பிறகும் ஐந்து லட்ச ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று விரட்டி விடுகிறார்கள். இதனால் என் குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். என் வீட்டு மின் இணைப்பை துண்டித்துள்ளனர். அரசு ஒதுக்கீடு செய்த வீட்டை கூட கட்ட விடாமல் தடுத்து வருகின்றனர். என் குடும்பத்தினர் யாரும் ஊரில் நடமாடக்கூடாது என என்னையும், என் குடும்பத்தினரையும் மிரட்டி வருகின்றனர். இது குறித்து போலீசில் பல முறை புகார் குறித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் கூறியதோடு அதுசம்பந்தமான புகார் மனு ஒன்றையும் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ளார்.
ஒரு குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக கூறப்படும் சம்பவத்தில் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவது ஏன் என்று கேட்கிறார்கள் அப்பகுதி மக்கள்.