திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் கோவண்டாக்குறிச்சி ஊராட்சியில் உள்ள வடுகர் பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவரிடம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூபாய் 75 ஆயிரம் மோசடி செய்த நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
புள்ளம்பாடி அருகே கோவண்டாக்குறிச்சி ஊராட்சியில் உள்ள வடுகர்பேட்டை மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் 36 வயதான திரல்டின் ஜெயக்குமார். பட்டதாரியான இவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வதற்காக சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள குளோபல் டிராவல்ஸ் இன்போ நிறுவனத்தை அணுகி உள்ளார். அந்த நிறுவனத்தை சென்னை ஆவடி காமராஜர் நகர் 9 வது தெருவைச் சேர்ந்த மின்ஹாஜுதீன் நடத்தி வருகிறார். அந்நிறுவனத்தைத் தொடர்பு கொண்ட திரல்டின் ஜெயக்குமார் வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார். வெளிநாட்டு வேலைக்கு அனுப்பி வைக்க ரூ. இரண்டு லட்சம் கேட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஜெயக்குமார் முன்பணமாக ரூபாய் 75 ஆயிரத்தை அந்த நிறுவனத்திடம் கொடுத்தார். ஆனால் மூன்று மாதங்களுக்கு மேலாக வெளிநாட்டுக்கு அவரை அனுப்பி வைக்கவில்லை. இதை தொடர்ந்து அவர் தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டார். ஆனால் அந்நிறுவனத்தினர் பணத்தை திரும்பிக் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த திரல்டின் ஜெயக்குமார் இது குறித்து கல்லக்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் கல்லக்குடி போலீசார் குளோபல் டிராவல்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி சென்னை ஆவடி சேர்ந்த மின்ஹாஜுதீன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.