சமூக செயற்பாட்டாளர் முகிலன் கூடன்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்ட வழக்குகளுக்காக கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் முகிலன் அடைக்கப்பட்டு இன்றுடன் 279 நாட்களாகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் (21-09-18) மாலை அவர் மீது அரவாக்குறிச்சி சீத்தாப்பட்டி கிராமத்தில் 23.4.2017 அன்று இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தேசதுரோக வழக்கில் பாளையங்கோட்டை சிறையில் கைது குறிப்பாணை கொடுத்து கைது செய்தனர்.
கடந்த ஆண்டு ஏப்ரல் 23ந் தேதி புரட்சியாளர்கள் அம்பேத்கார், பாரதிதாசன் பிறந்த நாள் பொதுக்கூட்டம் தந்தை பெரியார் திராவிடர் கழகம் மற்றும் பெரியார் திராவிடர் மாணவர் இயக்கம் சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் முகிலன் கலந்து கொண்டு பேசும் போது..
தமிழ்நாடு என்ற நாட்டை இல்லாமல் அழிக்கும் வகையில் தொடர்ந்து பல்வேறு சதிவேலைகளை இந்திய அரசு செய்து வருகிறது என்றும், நியூட்ரினோ - அணுஉலை- ஸ்டெர்லைட் - ஹைட்ரோகார்பன் - போன்ற நாசக்கார திட்டங்களை எல்லாம் தமிழகத்திற்கு தொடர்ந்து இந்திய அரசாங்கம் கொண்டு வருகிறது என்றும் பேசியதாக குறிப்பிட்டு அவர் மீது அரவாக்குறிச்சி காவல் உதவி ஆய்வாளர் அமிர்தலிங்கம் 17.12.17 அன்று கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயமோகன் முகிலன் மீது 537/17ச/பி 124(ஏ), 153(ஏ)(1), 505(1) (பி) ஐபிசி ஆகிய பிரிவுகளில் தேச துரோக வழக்கு பதியப்பட்டு கடந்த 21.6.2018 சிறையில் கைது குறிப்பானை கொடுத்து கைது செய்யப்பட்டு கரூர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
அதே போல மற்றொரு வழக்கான கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் 29-09-2016 அன்று மணல் குவாரிகளை ரத்து செய்யக்கோரி சட்டவிரோதமாக ஒன்று கூடி அரசு உத்தரவை மீறி ஊர்வலமாக வந்து உண்ணாவிரதம் இருந்ததாக போடப்பட்ட வழக்கிலும் அவர் கரூர் நீதிமன்றத்தில் நேற்று (22-06-18) ஆஜர் படுத்தப்பட்டார். முகிலன் கரூர் நீதிமன்றத்தில் ஆஜராக அழைத்து வரப்பட்ட போது செய்தியாளர்களிடம் பேசவிடாமல் தள்ளிச் சென்றுனர். அதையும் மீறி போலிஸ் வேனில் இருந்தபடியே பேசினார்..
தமிழகத்தின் வாழ்வாதாரத்தை அழித்துக் கொண்டிருப்பதாக பேசியதற்காக அரவாக்குறிச்சி காவல் நிலையத்தில் தேசதுரோக வழக்கு போட்டு அழைத்து வந்திருக்கிறார்கள். எத்தனை வழக்கு போட்டாலும் அடக்க முடியாது. தொடர்ந்து போராடுவோம். பசுமை வழிச்சாலையை எதிர்த்து போராடினால் கைது நடவடிக்கை எடுத்து அச்சுறுத்துகிறார்கள். மோடியும் எடப்பாடியும் சேர்ந்து தமிழகத்தின் வாழ்வாதாரத்தை அழிக்கிறார்கள். தமிழக மக்கள் எதைக்கண்டும் அஞ்சவேண்டாம் என்று பேசிக் கொண்டிருக்கும் போதே வேனை வேகமாக எடுத்துச் சென்றனர்.
முகிலன் பல முறை சிறையில் உண்ணாவிரதம் இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு 12 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்தார். இது போல தொடர்ந்து சிறைக்குள்ளும் போராட்டங்கள் தொடர்ந்தால் வெளியிலும் போராட்டங்கள் எழலாம் என்று தான் அவர் மீது காலங்கடந்து தேசதுரோக வழக்கு போட்டிருப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். போராடினால் கைது.. இது தமிழக பார்முலா.