கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே உள்ள வைடி பாக்கத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி (50). இவருக்கும் பாலூர்களர் காலனி பகுதியை சேர்ந்த பாப்பாத்தி (42) என்பவருக்கும் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளர்களான அவர்கள் இருவரும் பாலூரிலும், வைடிபாக்கத்திலும் மாறி,மாறி வசித்து வந்தனர். அவ்வப்போது வெளியூர்களுக்கும் கரும்பு வெட்டச் சென்று வருவார்கள்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மனைவி பாப்பாத்தியை ஊரில் விட்டுவிட்டு கருணாநிதி மட்டும் தென்காசி மாவட்டத்திற்கு கரும்பு வெட்டச் சென்றுள்ளார். கடந்த 6 மாதமாக கருணாநிதி ஊர் திரும்பவில்லை. இந்தநிலையில் கரும்பு வெட்ட சென்ற இடத்தில் கருணாநிதிக்கும், அங்கு கரும்பு வெட்ட சென்றிருந்த, பண்ருட்டி அடுத்துள்ள சிறு கிராமப்பகுதியைச் சேர்ந்த ஏழுமலையின் மனைவி (35) நாகலட்சுமி என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கடந்த 13ம் தேதி நாகலட்சுமியை வைடி பாக்கத்திலுள்ள தனது வீட்டிற்கு கருணாநிதி அழைத்து வந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த கருணாநிதி மனைவி பாப்பாத்தி அங்கு சென்றுள்ளார். அப்போது கணவர் கருணாநிதியிடம் “நான் உயிரோடு இருக்கும் போதே இன்னொரு மனைவி தேவையா” என்று பாப்பாத்தி தகராறு செய்துள்ளார்.
இந்தநிலையில் ஜூலை 16ஆம் தேதி மதியம் கருணாநிதி வீட்டின் முன் பாப்பாத்தி மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார் இதுகுறித்து நெல்லிக்குப்பம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கருணாநிதி மற்றும் அவருடன் பழகிவந்த நாகலட்சுமி ஆகிய இருவரையும் தேடி வந்தனர்.
நேற்று காலை மேல்பட்டாம்பாக்கம் காவல் ஆய்வாளர் வீரமணி தலைமையிலான காவலர்கள் ரோந்து சென்றபோது சந்தேகப்படும்படி நின்ற கருணாநிதி, நாகலட்சுமி ஆகிய இருவரையும் அழைத்து விசாரணை செய்தனர். அப்போது கருணாநிதியிடம் விசாரித்ததில் கருணாநிதிக்கும், நாகலட்சுமிக்கும் ஏற்பட்ட தொடர்பு, பாப்பாத்திக்கு பிடிக்காமல் கணவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது என்றும் அந்தக் கோபத்தில் பாப்பாத்தி விஷம் குடித்து இறந்திருக்கலாம் என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.
இதையடுத்து மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக கருணாநிதி, அவருடன் பழகிவந்த நாகலட்சுமி ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். பாப்பாத்தி தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து காவல்துறையினர் மேலும் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.