திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகே பேரூர் கிராமத்தை சேர்ந்தவர் நீலமேகம். இவர் காஷ்மீரில் துணை ராணுவப் படை பிரிவில் வீரராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கலைவாணி சம்பவத்தன்று வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, அவர் கழுத்தில் கிடந்த 8 பவுன் தாலி சங்கிலியை மர்ம நபர் ஒருவர் பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டார். இதுகுறித்து நீலமேகம் காஷ்மீரில் இருந்து வாட்ஸ்அப் மூலமாக தனது குடும்பத்திற்கு பாதுகாப்பு வேண்டும் எனப் பேசிய வீடியோ வைரலானது.
பின்னர் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, நீலமேகம் மற்றும் அவரது மனைவியிடம் போலீசார் சார்பில் உரிய பாதுகாப்பு குறித்தும், குற்றவாளியை கைது செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.இதுகுறித்து தா.பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் கலைவாணியிடம் தாலி சங்கிலியைப் பறித்துச் சென்ற நபர் வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்தியச் சிறையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சிறையில் இருந்த தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த மணிகண்டன் என்கிற கண்ணன் (வயது 40) என்பவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் கலைவாணியிடம் தாலி சங்கிலியைப் பறித்துச் சென்றதை ஒப்புக் கொண்டார். மேலும் அவரிடம் இருந்து போலீசார் தாலி சங்கிலியை பறிமுதல் செய்தனர்.