தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக் கழகத்தில் முறைகேடாகச் சேர்ந்த 37 மாணவர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதோடு, முறைகேட்டில் ஈடுபட்டதாகத் தேர்வு கட்டுப்பாட்டாளர் உள்ளிட்ட இருவர் தற்காலிகப் பணியிடை நீக்கமும் செய்துள்ளனர்.
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் கடந்த 2012 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது நாகப்பட்டினத்தில் துவங்கப்பட்டது. இதில் மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் நாகை மாவட்டம் தலைஞாயிறு, பொன்னேரி, சென்னை, தூத்துக்குடி ஆகிய ஆறு இடங்களில் உறுப்புக்கல்லூரி துவங்கப்பட்டுள்ளன. இந்த உறுப்புக்கல்லூரியில் மீன்வள அறிவியல் பிரிவில் 120 இடங்கள், மீன்வளப் பொறியியல் பிரிவில் 30 இடங்கள், ஆற்றல் மற்றும் சூற்றுச்சூழல் பிரிவில் 20 என 250 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இதற்காக ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்கப்பட்டு, பிறகு கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.
இந்தநிலையில், பல்கலையின் கீழ் இயங்கும் டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நான்கு ஆண்டு இளநிலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பு 2021-2022 மற்றும் 2022-2023 மாணவர் சேர்க்கையில் பெரும் முறைகேடு நடந்திருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த முறைகேட்டில் தமிழ்நாடு ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் பி.ஜவகர் ஈடுபட்டிருப்பது அம்பலமாகியுள்ளது. இது குறித்து மாணவர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் தமிழக அரசும், பல்கலைக்கழகமும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதற்காக பல்கலைக்கழகம் மற்றும் அரசு சார்பில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் கமிட்டி விசாரணையில் களமிறங்கியுள்ளனர்.
முதற்கட்டமாக தமிழ்நாடு ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 2022-23 ஆம் கல்வியாண்டில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பல மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், தகுதியில்லாதவர்கள் இளநிலை மீன்வளப் பட்டப் படிப்புகளில் சேர்க்கை வழங்கியதால் பெரும் ஊழல் நடந்துள்ளதும், கட்-ஆஃப் (190-க்கு 127) மதிப்பெண்களுக்குக் குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சேர்க்கை வழங்கப்பட்டது அம்பலமாகியுள்ளது.
தகுதியற்றவர்களிடம் இருந்து பல லட்ச ரூபாய் என மொத்தமாக கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டாளர் பி.ஜவகர் 32 மாணவர்களை இங்கு சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை முறைகேட்டில் ஈடுபட்ட தமிழ்நாடு ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் பி.ஜவகர் தற்போது தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் லஞ்சம் பெற அவருக்கு யார் யாரெல்லாம் துணையாக நின்றார்கள் என்பது குறித்தும் தமிழக மீன்வளத்துறை ஆணையர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே தலைஞாயிறு, டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் BFSC பட்டப்படிப்பில் முறைகேடாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 32 மாணவ மாணவியர் தேர்வு எழுதத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் முறைகேடாகச் சேர்ந்த மாணவர்களின் கல்வி தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. 32 மாணவர்களின் எதிர்காலம் என்ன ஆகுமோ என்கிற கவலை அவர்களது பெற்றோர்களுக்கு எழுந்துள்ளது.
மாணவர் சேர்க்கையில் முறைகேடுகள் நடந்திருப்பதாக வந்த புகார்களைத் தொடந்து, தமிழ்நாடு ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர். ஜி.சுகுமாரிடம் கேட்டபோது, இதுகுறித்து பல்கலைக்கழகம் மற்றும் அரசு தரப்பில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும், கமிட்டியின் அறிக்கைக்காக காத்திருப்பதாகத் தெரிவித்தார்.
மேலும் கையூட்டு எவ்வாறு? யார் மூலம் பெற்றார்கள் என்பது குறித்த உண்மை வெளிச்சத்திற்கு வந்ததும் அவர்கள் மீது நிச்சயம் பல்கலைக்கழகம் மற்றும் அரசு சார்பில் நடவடிக்கை பாயும் என்றார்.
இதனிடையே பல்கலைக்கழக வளாகம் மற்றும் தூத்துக்குடியில் உள்ள கல்லூரியைச் சேர்ந்த சில மாணவர்கள் உட்பட இரண்டாம் ஆண்டு படித்து வரும் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மாணவர்கள் அனைவருக்கும் தனித்தனியாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளன. குறைவான மதிப்பெண் பெற்ற நீங்கள் எப்படி பட்டப்படிப்பில் சேர்ந்தீர்கள்; கலந்தாய்வில் பங்கேற்றீர்களா; அதற்கான ஆவணங்கள் இருக்கிறதா? கலந்தாய்வின் போது கையெழுத்து இட்டீர்களா என்பது உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களுடன் விசாரணைக்கு ஆஜராகுமாறு மாணவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விசாரணையானது, பல்கலைக்கழக வளாகம் மற்றும் தூத்துக்குடியில் உள்ள கல்லூரியில் நடைபெற உள்ளன.
நாகையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில், இளநிலை மீன்வளப் அறிவியல் பட்டப் படிப்பு சேர்க்கை விவகாரத்தில், பல கோடி ரூபாய் கையூட்டு பெற்ற பல்கலைக்கழகத் தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜவகர் உள்ளிட்ட இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவமும், இதில் முறைகேடாக சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதத் தடை விதித்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட தகவல் பல்கலைக்கழக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.