தமிழ்நாடு முழுவதும் திமுக முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு விழா ஜூன் மூன்றாம் தேதி தொடங்கி 2024 ஜூன் மாதம் வரை ஓராண்டுக்கு கொண்டாடுவது என திமுக தலைமை அறிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு தலைப்புகளில் நூற்றாண்டு விழா விதவிதமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
அதன்படி திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர திமுக சார்பில் நகர செயலாளர் சாரதிகுமார் ஏற்பாட்டில் தென்னிந்திய ஆணழகன் போட்டி வாணியம்பாடியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான பாடிபில்டர்ஸ் என்கிற ஆணழகன்கள் கலந்துகொண்டனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக மாவட்டச் செயலாளர் தேவராஜ் எம்.எல்.ஏ கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். பல்வேறு பிரிவுகளின் கீழ் நடைபெற்ற இந்த போட்டியில் தென்னிந்திய ஆணழகனாக கர்நாடகாவைச் சேர்ந்த நடராஜ் என்பவர் சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றார். இந்த போட்டியில் பெண்களும் கலந்து கொண்டனர். கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் இதில் கலந்துகொண்டனர். அவர்களில் வாணியம்பாடியை சேர்ந்த சங்கீதா என்ற பெண் சாம்பியன் பட்டத்தை பெற்றார். அவர்களுக்கான பட்டத்தை மா.செ தேவராஜ், ந.செ சாரதிகுமார் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கலந்து கொண்டு ரசித்தனர்.