
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அ.ம.மு.க. கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், பா.ம.க.வின் இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் எல்.முருகன், பா.ஜ.க.வின் மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி உள்ளிட்டோர் தங்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல், வரும் நாட்களில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர்கள் உள்ளிட்டோர் தமிழகத்தில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட உள்ளதால், தமிழக தேர்தல் சூடுபிடித்துள்ளது.

மற்றொரு புறம் வாக்காளர்களுக்குப் பணம், பரிசுப்பொருள்கள் வழங்குவதைத் தடுக்கும் வகையில், அனைத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் பறக்கும் படையினர் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஆங்காங்கே வாகன சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் தனது கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்துத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் கமல்ஹாசன், திருச்சியில் நடைபெற உள்ள கட்சியின் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தனது கேரவன் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கமல்ஹாசனின் வாகனத்தைச் சோதனை செய்தனர். சோதனைக்குப் பின்னர் அவரின் வாகனம் அனுப்பி வைக்கப்பட்டது.