நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், "தமிழகத்தில் இதுவரை இல்லாத அரசியலை நடத்த வேண்டும் என்பதே மக்கள் நீதி மய்யத்தின் ஆசை. ரஜினியுடன் இணைவீர்களா என்ற கேள்விக்கு பதில் சொல்லும் நேரம் இதுவல்ல. எங்கள் சின்னம் நிராகரிக்கப்பட்டுள்ளது; நியாயமான முறையில் போராடிப் பெறுவோம். இல்லத்தரசிகளுக்கு 'ஊதியம்' என்ற திட்டத்தைக் கொண்டு வருவோம்.
அரசியலில் யாரும் என்னை இயக்கவில்லை; என்னை யாரும் இயக்க முடியாது. நல்லவர்கள் எங்களுடன் இணைந்து செயல்படுவார்கள் என்பது எங்கள் நம்பிக்கை. எம்.ஜி.ஆர். பற்றி நான் இப்போது பேசவில்லை; 40 ஆண்டுகளுக்கு முன்பே பேசியுள்ளேன். போஸ்டரில் எம்.ஜி.ஆர். படத்தை சிறியதாக்கியவர்கள் தான் தற்போது என்னை எதிர்க்கிறார்கள். எம்.ஜி.ஆரை அரசியலுக்காக யார் கையில் எடுக்கிறார்கள் என்பது மக்களுக்குத் தெரியும். தி.மு.க.வுடன் கூட்டணி அமையுமா? என்ற கேள்விக்கு, 'அதுபற்றி பேசும் நேரம் இதுவல்ல' என்றார்.