அ.தி.மு.க. ஆட்சியில் சந்துக்கடைகள் எனப்படும் கள்ளச்சந்தை மதுக்கடைகளின் வளர்ச்சியால் பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துள்ள விவகாரம் தி.மு.க. நடத்தும் கிராமசபைக் கூட்டங்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. சேலம் அருகே ஏ.என்.மங்கலம் என்ற ஒரு கிராமமே சந்துக்கடைகளின் பிடியில் சிக்கித் தவித்து வருவதாக பெண்கள் கண்ணீருடன் கூறினர்.
தி.மு.க. சார்பில் டிச.23- ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கிராமசபைக் கூட்டங்கள் வாயிலாக தேர்தல் பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இக்கூட்டங்களுக்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பால், கிராமசபை என்ற பெயரில் கூட்டம் நடத்தக்கூடாது என தமிழக அரசு திடீரென்று தடை விதித்தது. இதையடுத்து, 'மக்கள் கிராம சபை' என்ற பெயரில் கூட்டம் நடத்த தி.மு.க.வினருக்கு அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இந்நிலையில், சேலம் மாவட்டம் ஏ.என்.மங்கலத்தில் வெள்ளிக்கிழமை (டிச. 25) மக்கள் கிராமசபைக் கூட்டம், அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் விஜயகுமார் தலைமையில் நடந்தது. அயோத்தியாப்பட்டணம் ஒன்றியக்குழு கவுன்சிலர் பாரதி ஜெயக்குமார் வரவேற்றார்.
காரிப்பட்டி காவல்துறையினர், மக்களை திரட்டி தேர்தல் பரப்புரை செய்யக்கூடாது; மைக் செட் கட்டக்கூடாது என்று அதட்டினர். இதற்கு விஜயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர்கள் மக்களை சந்தித்து குறைகள் கேட்கலாம். அதேபோல்தான் ஒன்றியக்குழு துணைத்தலைவர், கவுன்சிலர் ஆகியோரும் மக்கள் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் மக்களை சந்தித்து குறைகளைக் கேட்கிறோம். இதை யாராலும் தடுக்க முடியாது என்றனர். இதனால் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மைக் செட் மட்டும் கட்ட வேண்டாம் என்ற நிபந்தனையுடன காவல்துறையினர் கூட்டம் நடத்த அனுமதித்தனர். மேலும், அயோத்தியாப்பட்டணம் ஒன்றியக்குழு துணைத் தலைவர் புவனேஸ்வரி செந்தில்குமார், மக்கள் கிராம சபை என்ற பெயரில் மக்களிடம் குறைதீர் மனுக்களைப் பெறுகிறோம் என்று மாவட்ட ஆட்சியர், எஸ்.பி., காரிப்பட்டி காவல்நிலையம் ஆகியோரிடம் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பினர். மக்கள் கிராமசபை என்ற பெயரில் கூட்டம் நடத்த தடை இல்லை என்று அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து, கூட்டம் தொடங்கியது.
பெண்கள் கூட்டம் அதிகளவில் திரண்டு வந்திருந்தனர். முத்துலட்சுமி, சாந்தி ஆகியோர் உள்ளூரில் சந்துக்கடை எனப்படும் கள்ளச்சந்தை மதுக்கடைகளால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து பேசினர். குறிப்பாக சாந்தி என்பவர் கூறுகையில், ''எனக்கு கணவரும், நான்கு மகன்களும் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி விட்டனர். இந்த ஊரில் பத்துக்கும் மேற்பட்ட சந்துக்கடைகளில் 24 மணி நேரமும் திருட்டுத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்கின்றனர். கூலி வேலைக்குப் போவதால் கிடைக்கும் சொற்ப கூலியையும் சந்துக்கடைகளில் மது வாங்கிக் குடிக்கவே செலவழித்து விடுகின்றனர்.
இதனால் குடும்ப செலவுகளுக்குக் கூட பணம் தருவதில்லை. அவர்களால் வேலைவெட்டிக்கும் ஒழுங்காக போகமுடியவில்லை. குடியால் எங்கள் குடும்பமே சீரழிந்து விட்டது. சந்துக்கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும். நாலு புள்ள பெத்தும் என்னை நிம்மதியாக இருக்க விடல. இனியும் எந்த குடும்பமும் என்னைப் போல கஷ்டப்படக்கூடாது,'' என கண்ணீர் மல்கக் கூறினார்.
இதைக் கேட்ட அயோத்தியாப்பட்டணம் ஒன்றியக்குழு துணைத்தலைவர் புவனேஸ்வரி செந்தில்குமார், ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் விஜயகுமார் ஆகியோர் அந்தக் கூட்டத்தை கண்காணிக்க வந்த காவல்துறையினரிடம் ஏ.என்.மங்கலத்தில் உள்ள சந்துக்கடைகளை மூடக்கோரியும், மது விற்போர் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரினர்.
குமார், ரங்கராஜ், பாக்கியம் ஆகியோர் பேசுகையில், ''ஏ.என்.மங்கலம் கிராமத்தில் காது கேட்காத, வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகள் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவித்தொகை வழங்குமாறு அரசுக்கு பலமுறை விண்ணப்பித்தும் உதவித்தொகை கிடைக்கவில்லை,'' என்றனர்.
மணிவண்ணன் என்பவர், ''ஏரிப்புதூரில் 100 ஏக்கர் பரப்பளவிலான ஏரி சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாயிகள், தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. இதனால் ஏரிக்கு தண்ணீர் வரக்கூடிய நீர்வழித்தடங்கள் முற்றிலும் மறிக்கப்பட்டு விட்டது. ஏரியை ஆக்கிரமிப்புகளை அகற்றி, சீரமைத்தால் ஏரி முழுமையாக நிரம்பும் வாய்ப்பு உள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிப்பதோடு, உள்ளூரில் விவசாயத்திற்கும் பயனளிக்கும்,'' என்றார்.
இன்னும் சிலர், ஏரிப்புதூர் பகுதியில் சாக்கடை கழிவு நீர் சாலையிலேயே தேங்கி, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவதாக கூறினர். வள்ளுவர் பூங்காவில் உள்ள சமுதாயக்கூடத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும், அங்குள்ள ஊர்ப்புற நூலகத்தை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் கோரி மனுக்களை வழங்கினர்.
கூட்டத்தில் தெரிவித்த மக்கள் குறைகள் அனைத்தும் தீர்மான பதிவேட்டில் பதிவு செய்தனர். இதையடுத்து அ.தி.மு.க. அரசில் நடந்த ஊழல்கள் குறித்து குற்றப்பத்திரிகை என்ற பெயரில் அச்சிட்ட துண்டறிக்கைகளை தி.மு.க. நிர்வாகிகள் முத்து, வெங்கடராசு, அகரம் ராஜேந்திரன் உள்ளிட்டோர் வீடு வீடாகச் சென்று விநியோகித்தனர்.
அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் விஜயகுமார் கூறுகையில், ''அ.தி.மு.க. தொடர்ந்து பத்தாண்டுகள் ஆட்சியில் இருந்தும்கூட ஏ.என். மங்கலம் கிராமத்தில் எந்த ஒரு வளர்ச்சித் திட்டப்பணிகளையும் மேற்கொள்ளவில்லை என்பது மக்கள் கிராமசபை மூலம் தெரிய வந்திருக்கிறது. ஆளுங்கட்சியினரே இந்த ஊரில் பல இடங்களில் சந்துக்கடைகள் மூலம் மதுபானங்களை சட்ட விரோதமாக விற்கின்றனர்.
அவர்கள் காரிப்பட்டி காவல்நிலையத்திற்கு மாதந்தோறும் 10 ஆயிரம் ரூபாய் மாமூல் கொடுத்து விடுவதால் சந்துக்கடைகள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் விட்டு விடுகின்றனர். சந்துக்கடைகள், டாஸ்மாக் மூலம் அரசே விளிம்பு நிலை மக்களின் குடும்பங்களை சீரழித்து வருகிறது. சந்துக்கடைகளை ஒழிக்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்.
ஆதரவற்ற முதியோர், கணவனை இழந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கக் கேட்டு விண்ணப்பித்தும் பலருக்கு கிடைக்கவில்லை. ஆளுங்கட்சிக்காரர்கள் பணம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே உதவித்தொகை பெற்றுத் தருவதாகவும் பலர் தெரிவித்துள்ளனர்,'' என்றார்.
அயோத்தியாப்பட்டணம் ஒன்றியக்குழு கவுன்சிலர் பாரதி ஜெயக்குமார் கூறுகையில், ''ஏ.என். மங்கலம் கிராமத்திற்கு என்று ஒரே ஒரு துணை சுகாதாரநிலையம் இருக்கிறது. ஒரே ஒரு செவிலியர் மட்டும் எப்போதாவது வருவார். ஒரு மணி நேரம் மட்டும் இருந்துவிட்டு சென்று விடுவார். மினி கிளினிக் திறக்கும் இந்த அரசு, ஏன் இதுபோன்ற துணை சுகாதார நிலையங்களை முழு நேர மருத்துவமனை ஆக மாற்றக்கூடாது?
ஒரு காலத்தில் இந்த மையத்தில் பிரசவ சிகிச்சை எல்லாம் பார்க்கப்பட்டது. 20 ஆண்டுக்கும் மேலாக மகப்பேறு சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. இங்குள்ள மக்கள் அவசர சிகிச்சை பெற வேண்டுமானால் 4 கி.மீ. தொலைவில் உள்ள அயோத்தியாப்பட்டணம் அல்லது 3 கி.மீ. தொலைவில் உள்ள மின்னாம்பள்ளிக்குதான் செல்ல வேண்டும். இந்த துணை சுகாதார நிலையத்தை முழு நேர மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்,'' என்றார்.
மக்கள் கிராம சபைக்கு வந்திருந்தவர்கள், அ.தி.மு.க. நிராகரிக்கிறோம் என்ற பதாகையில் கையெழுதிட்டனர். நிகழ்வுகளை உளவுத்துறையினர் முழுமையாக வீடியோவில் பதிவு செய்து கொண்டனர்.