சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாநில திட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திட்டக்குழு தலைவர்கள், அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “கட்டணமில்லா பயணச்சலுகை மூலம் பெண்கள் பயன் அடைந்துள்ளனர் என்பது திட்டக்குழு அறிக்கை மூலம் தெரிய வருகிறது. முகநூலில் ஒருவர் எழுதியதைப் பார்த்தேன், ‘எங்கள் கிராமங்களில் 300 பெண்களுக்கு உரிமைத்தொகை வந்துள்ளது. அப்படியானால் எனது கிராமத்திற்கு 3 லட்ச ரூபாய் வந்துள்ளது. இதனால் எங்களது கிராமத்தில் பண புழக்கம் அதிகமாகியுள்ளது. இதன்மூலம் எனது கிராமத்தில் 3 லட்சம் ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இப்படி ஆங்கில ஊடகம் கூட தமிழ்நாட்டுத் திட்டம் குறித்துப் பேசிவருகிறது.
நான் முதல்வன் திட்டம் மூலம் தமிழ்நாட்டு மாணவர்கள் திறன்மிகுந்த மாணவர்களாக உருவாகி வருகின்றனர். இத்திட்டத்தின் மூலம் 13 லட்சம் பேருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. நான் முதல்வன் திட்டத்தை மேலும் செழுமைப்படுத்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
செலவினத்தின் அடிப்படையில் எந்த ஒரு திட்டத்தையும் அளவிடாமல், பயன்பாட்டின் அடிப்படையில் அளவிட வேண்டும் என்பதைத் திட்டக்குழு வழிகாட்டி வருகிறது. சில முக்கிய கொள்கைகளை வகுக்கும் பணி திட்டக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது” என்றார்.