நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.
இந்நிலையில் நாமக்கலில் அதிமுக வேட்பாளர் தமிழ்மணியை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். கூட்டத்தில் அவர் பேசுகையில், ''கைத்தொழில் நெசவாளர்கள் பாதிப்பாகாத வகையில் பார்த்துக் கொண்ட அரசு அதிமுக .அரசு ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த பலர் கைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள். சங்ககிரி, திருச்செங்கோடு, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் விசைத்தறிகள் செயல்பட்டு வருகிறது. அந்தப் பகுதிகளில் நன்கு அறிமுகமானவன் நான். எல்லா இடத்திற்கும் நான் சென்று வந்திருக்கின்றேன். இந்த விசைத்தறி தொழில் ஒரு பிரதான தொழிலாக இருக்கிறது. பல்லாயிரக்கணக்கான பேர் விசைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள்.
இன்றைக்கு அந்தத் தொழில் எல்லாம் நசுங்கி நலிவடைந்து வருகிறது. இந்தத் தொழில் சிறக்க ஏதாவது இந்த அரசு நடவடிக்கை வேண்டும் என குரல் கொடுத்தால், திமுக அரசு எதையுமே கண்டுகொள்ளாமல் இருக்கிறது. விலையில்லா வேட்டி, சேலைகள் அதிமுக ஆட்சிக் காலத்தில் உரிய நேரத்தில் இந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு ஆர்டர் கொடுத்தோம். இதனால் அந்தத் தொழில் பாதுகாக்கப்பட்டது. ஆனால் 2021 சரியான ஆர்டர் கொடுக்கவில்லை. அதனால் வேலை வாய்ப்பை இழந்தார்கள். 2024ல் தரமான நூல் கொடுக்கவில்லை. அதனால் இப்பொழுது தொழில் சரிவை கண்டுள்ளது. ஆகவே அதிமுக ஆட்சி உங்கள் ஆதரவோடு மீண்டும் மலரும். அப்பொழுது இந்தத் தொழில் செழிக்கும். திமுகவின் பொம்மை முதலமைச்சர் தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் வரை இப்படித்தான் இருக்கும். இதற்கெல்லாம் விடிவு காலம் வர வேண்டும் என்றால் மீண்டும் அதிமுக கட்சிக்கு வர வேண்டும். அப்பொழுதுதான் ஏழைகள் இல்லை என்ற சொல்லை உருவாக்க முடியும்''என்றார்.