தமிழகத்தையே உலுக்கிய ஏடிஎம் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி ஹரியானாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி திருவண்ணாமலையில் நான்கு ஏடிஎம்களில் 70 லட்சத்திற்கும் மேலான பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளிகளைப் பிடிக்க 5 எஸ்.பிக்கள் தலைமையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கர்நாடக, ஆந்திரா மற்றும் வட மாநிலங்களிலும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அதில் கொள்ளையில் ஈடுபட்ட ஆரிவ், ஆசாத் என்பவர்களை ஹரியானாவில் வைத்து தமிழக போலீஸ் கைது செய்தது. பின்னர் அனைவரும் விமானத்தின் மூலம் ஹரியானாவில் இருந்து திருவண்ணாமலை அழைத்து வந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான ஆசிப், ஹரியானா மாநிலம் ஆரவல்லி கிராமத்தில் பதுங்கியிருந்தவரை தமிழக போலீசார் துப்பாக்கி முனையில் வைத்து கைது செய்துள்ளனர். தற்போது அவரை திருவண்ணாமலை அழைத்து வந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை இந்த வழக்கில் 9 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களிடம் இருந்து ரூ. 20 லட்சம் ரொக்கம், 3 கார்கள், ஒரு கண்டெய்னர் லாரி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் முக்கிய குற்றவாளியான ஆசிப்பை கைது செய்த திருவண்ணாமலை போலீசாருக்கு டிஐஜி சைலேந்திரபாபு ரூ.1 லட்சம் வெகுமதி அறிவித்துள்ளார்.