மத்திய-மாநில அரசுளுக்கு எதிராக அவ்வப்போது போராட்டம் நடத்துவது, மதுரையைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் நந்தினியின் வழக்கமாக உள்ளது. சட்டக்கல்லூரி மாணவியாக இருந்தபோதே, மதுக்கடைகளை மூட வேண்டும் என, தனது தந்தையுடன் சேர்ந்து பலமுறை போராட்டம் நடத்தியவர் நந்தினி.
இவரும் இவருடைய தங்கை நிரஞ்சனாவும், கடந்த 13ம் தேதி தேனி பேருந்து நிலையத்தில், “பிரதமர் மோடி ஆட்சியில் அதானி, அம்பானி போன்ற பெருமுதலாளிகளுக்கு மட்டுமே சலுகைகள் வழங்கப்படுகிறது. அவர்களது வராக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது. எட்டு ஆண்டு கால மோடி ஆட்சியில் ஏழை மக்கள் ஏழைகளாகவே இருக்கின்றனர்” என்று கூறி துண்டுப்பிரசுரம் விநியோகம் செய்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. தொண்டர்கள் அங்கே கூடி போராட்டம் செய்ததால், பரபரப்பு நிலவியது. போலீசார் தலையிட்டு நந்தினி, நிரஞ்சனா ஆகியோரை விசாரணைக்கு அழைத்துச் சென்று, பின்னர் விடுவித்தனர். இந்நிலையில் 20-ம் தேதி காலை, நந்தினியும் நிரஞ்சனாவும் மதுரையில் இருந்து சென்னைக்குப் புறப்பட்டதை மோப்பம் பிடித்த போலீசார், உடனடியாக ‘அலர்ட்’செய்தனர். எதிர்பார்த்தது போலவே, தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தை முற்றுகையிட இருவரும் புறப்பட்டனர்.
அவர்களை முன்கூட்டியே மறித்த மாம்பலம் போலீசார், நேராக எழும்பூர் ரயில் நிலையம் அழைத்துச் சென்று, மதுரைக்கு ரயில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளனர். அதிலும், ரயில் புறப்படுகிற நேரத்தில் தண்ணீர் பாட்டில் வாங்குவதாகக் கூறி, நிரஞ்சனா கீழே இறங்கியிருக்கிறார். அவரை சமாதானப்படுத்தி ரயிலில் ஏற்றிவிட்டனர். ரயில் கிளம்பியபிறகே ‘அப்பாடா’ என காக்கிகள் நிம்மதிப் பெருமூச்சுவிட்டனர்.