Skip to main content

‘அப்பா... அதீத சோகத்தில் ஆழ்ந்துபோகாதீங்க; தம்பி உங்களை நம்பிதான் இருக்கான்’ மதுரை மாணவி ஜோதி துர்கா எழுதிய இறுதி கடிதம்

Published on 12/09/2020 | Edited on 12/09/2020

 

 

மதுரை தல்லாகுளம் பட்டாலியன் காவல்குடியிருப்பை சேர்ந்த காவல்துறை சப்- இன்ஸ்பெக்டர் முருகசுந்தரம் என்பவரின் மகளான ஜோதி துர்கா என்ற மாணவி கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி மதிப்பெண் குறைவாக பெற்ற நிலையில் இந்த ஆண்டிற்கான நீட் தேர்விற்கு படித்துகொண்டிருந்தபோது நேற்று இரவு தனது தந்தையிடம் தேர்வு குறித்து அச்சமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

 

எப்போதும் தனது தோழியுடன் இரவு முழுவதிலும் படித்துகொண்டிருக்கும் சூழலில் நேற்று தோழி இல்லாத நிலையில் படித்துகொண்டிருந்தபோது, தன் அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அதிகாலையில் தேநீர் வழங்குவதற்காக அறையை தட்டியபோது திறக்காத நிலையில் கதவை உடைத்து பார்த்தபோது மின்விசிறியில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளது தெரியவந்துள்ளது.

 

இதனையடுத்து உடலை கைப்பற்றிய தல்லாகுளம் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்கொலை குறித்து போலிசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

 

இந்நிலையில் அவர் தற்கொலை செய்துகொள்வதற்குமுன் அவர் தன் குடும்பத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘அப்பா தயவுசெய்து சோகத்தில் ஆழ்ந்துபோகாதீர்கள். எனக்குபின் தம்பி இருக்கிறான், அவன் உங்களை நம்பிதான் இருக்கிறான். அதனால் அவனை பார்த்துகொள்ளுங்கள். நீங்க இதயம் பாதிக்கப்பட்டவர், அதனால் மீண்டும் சொல்கிறேன் அதீத சோகத்தில் ஆழ்ந்துபோகாதீர்கள். கடந்து போவதுதான் வாழ்க்கை. நீங்களும் கடந்து செல்லுங்கள். வெளியே செல்லும்போது தனியாக வாகனம் ஓட்டிசெல்லாதீர்கள் உங்களுடன் யாரையாவது கூட்டி செல்லுங்கள். நீங்கள் இருக்கும் இடத்தை சுற்றி இருப்பவர்களை சந்தோஷமாக வைத்துகொள்ள உங்களால் மட்டும்தான் முடியும். அப்பா, எனக்கு மிகவும் பிடித்தமான என் செயினை நீங்கள் வைத்துகொள்ளுங்கள். எப்பவும் நீங்கள் செலெக்ட் செய்யும் ட்ரஸ் தான் எனக்கு ஸூட் ஆகும். இதில் யாரையும் தவறு சொல்வதற்கு இல்லை. எல்லாம் என் முடிவு. எனக்கு மிகவும் சந்தோஷமான குடும்பம் கிடைத்தது ஆனால் எனக்குத்தான் அதனை பாதுகாத்துகொள்ள தெரியவில்லை. இன்னும் நான் நிறைய சொல்லவேண்டும். ஆனால், என்னிடம் நேரமில்லை. என் வீடியோவை ஃபோனில் பதிவு செய்துள்ளேன் அதை பாருங்கள் என எழுதியுள்ளார். மேலும் தன் தம்பிக்கு, அதிக நேரம் போனில் கேம் விளையாடாத அப்றம் அதுக்கு அடிக்ட் ஆயிடுவ, உன்கிட்ட நிறைய திறமை இருக்கு அதனால் அதில் கவனம் செலுத்து. அப்பாவையும் அம்மாவையும் பத்திரமா பார்த்துக்கோ. அப்பாவை அதிக சோகத்திற்கு போகாமல் பார்த்துகோ. இனி அப்பா அம்மாவுக்கு எல்லாமே நீ தான் அவங்களுக்கு ஆறுதல் சொல்லி தேர்த்து. என எழுதியுள்ளார். 

 

தன் தோழிக்கு, நான் நன்றாகத்தான் படித்திருக்கிறேன். இருந்தாலும் மெடிக்கல் சீட் கிடைக்கவில்லை என்றால் அனைவருக்கும் பெரும் ஏமாற்றமாக இருக்கும். தம்பியை பார்த்துகொள் அவனை சோகத்தில் ஆழ்ந்துவிட செய்யாதே. எல்லாரும் என்னை மன்னித்துவிடுங்கள் நான் கலைத்துவிட்டேன் என எழுதியுள்ளார். இந்த கடிதத்தை பார்த்து அவர் குடும்பத்தினர் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். அவர்களுக்கு, அவர்கள் குடும்பத்தினரும், நண்பர்களும் ஆறுதல் கூறுகின்றனர் இருந்தும் மகளின் இந்த கடிதம் அவர்களை மிகுந்த வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்