மதுரை தத்தனேரி பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.80 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தை தொடங்கி வைத்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களைச் சந்தித்தார். “இத்திட்டத்தின் மூலம் மதுரை தூய்மையான நகரமாக, குப்பையில்லா நகரமாக, குப்பைத்தொட்டி இல்லா நகரமாக மாற்றப்படும். இதன்மூலம் தொன்மையும், பழமையும் சேர்ந்த புதுமையான நகராக மதுரையை மாற்ற முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழக அரசைக் குறை சொல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின். மீட்பு பணி நடைபெற்ற இடத்திற்கு முதல்வர் வரமுடியாத சூழ்நிலையில் துணைமுதல்வரை அனுப்பிவைத்தார். மூன்று நாட்களும் துணைமுதல்வர் அங்கேயே இருந்து மீட்பு பணிகளை கவனித்தார். குழந்தை சுஜித் மீட்பு பணி விவகாரத்தில் மனசாட்சியை அடகுவைத்து விட்டு தமிழக அரசைக் குற்றம் குறை சொல்லி வருகிறார் ஸ்டாலின்.
தமிழக அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை சுஜித் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதையெல்லாம் மறந்துவிட்டு மனசாட்சியே இல்லாத எதிர்க்கட்சித்தலைவராக ஸ்டாலின் இருக்கிறார். தீபாவளியைக்கூட கொண்டாட முடியாமல் புறந்தள்ளிவிட்டு குழந்தை சுஜித் மீட்பு பணியில் அமைச்சர்கள் முழு நேரமும் ஈடுபட்டனர். குழந்தையை மீட்கும் பணியில் அரசின் அத்தனை துறைகளும், அமைச்சர்களும் முழுமையாக ஈடுபட்டனர். அனைத்து தொழில்நுட்பங்களும் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டன.
தமிழக அரசின் மீட்புப்பணியைக் கண்டு சுஜித்தின் தாய் தந்தையே அரசைப் பாராட்டுகின்றனர். ஆனால் அதிமுகவுக்கு புகழ் சேர்வதைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஸ்டாலின் வேண்டுமென்றே அரசைக் குறை கூறி வருகிறார். நெல்லையில் கண்முன்னே உயிருக்குப் போராடிய காவலருக்கு தண்ணீர் கூட தந்து உதவாத ஆட்சி திமுக ஆட்சி. உள்ளாட்சித்தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்பட்டு வருகிறது.
உள்ளாட்சித்தேர்தலை தற்போது நடத்துவதற்கு ஸ்டாலினே பயப்படுகிறார். இரண்டு தொகுதி இடைத்தேர்தல் முடிவைக் கண்டபிறகு உள்ளாட்சித்தேர்தலைக் கண்டு எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் பயப்படுகிறார். கடந்த 10 நாட்களாக உள்ளாட்சித்தேர்தல் குறித்து ஸ்டாலின் எதுவுமே பேசவில்லை.” என்றார் அதிரடியாக.