தமிழ்நாட்டில் டாஸ்மாக் செயல்படும் நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை குறைக்குமாறு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரை செய்துள்ளது.
திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் மற்றும் மதுரையைச் சேர்ந்த ரமேஷ் ஆகியோர், டாஸ்மாக் மதுபானக் கடைகளின் விற்பனை நேரத்தைக் குறைக்கவும், பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை செய்யத் தடை விதிக்கவும் கோரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, “டாஸ்மாக் மதுபானக் கடைகளின் விற்பனை நேரத்தை நண்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படுமாறு மாற்றலாம் என்று பரிந்துரை செய்துள்ளது. அத்தோடு 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்கப்படுவதில்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும். மதுபாட்டில்களில் மதுவினால் ஏற்படும் விளைவுகளைத் தமிழில் அச்சிட வேண்டும். லேபிளில் விலைப் பட்டியல் மற்றும் தயாரிப்பு குறித்து குறைகள் இருந்தால், அதனைத் தெரிவிக்க முகவரி மற்றும் தொடர்பு விவரங்களை அச்சிட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளது.