Skip to main content

“இதுவரை அமைதியா இருந்துச்சு... இனி கடுமையா இருக்கும்...” - அன்புமணி 

Published on 09/01/2023 | Edited on 09/01/2023

 

"So far it has been calm.. Now it will be tough.." - Anbumani

 

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் மூலம் அனல் மின்சாரம் தயாரிக்கப்பட்டு தமிழகம் மட்டுமல்லாது கர்நாடகா, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய தென்னிந்திய மாநிலங்களுக்கும் மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அனல் மின்சார உற்பத்திக்காக நிலக்கரி சுரங்கங்களை விரிவுபடுத்தும் பணியில் என்.எல்.சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. சுரங்க விரிவாக்க பணிகளுக்காக நெய்வேலி அருகிலுள்ள வானதிராயபுரம், ஆதண்டார்கொல்லை, தொப்பளிக்குப்பம், வடக்குவெள்ளூர், அம்மேரி, தென்குத்து மற்றும் விருத்தாசலம் வட்டம் கம்மாபுரம் அருகிலுள்ள வளையமாதேவி, கரிவட்டி, கத்தாழை, மும்முடிசோழகன் உள்ளிட்ட 49 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 25,000 ஏக்கர் விளைநிலங்களைக் கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

 

கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு ஏக்கருக்கு 25 லட்சம் இழப்பீடு, வீடு நிலம் கொடுப்பவர்களுக்கு வேலைக்குப் பதிலாக 15 லட்சம் வாழ்வாதாரத் தொகை போன்றவை வழங்கப்படுவதாக என்.எல்.சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை மற்றும் ஏக்கருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு பல்வேறு கட்சிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

 

இதனிடையே கடந்த காலங்களில் என்.எல்.சிக்கு வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை. வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும் சுரங்கங்களுக்காக தண்ணீரை உறிஞ்சி எடுப்பதால் கடலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்துக்குச் சென்றுவிட்டது. சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்பட்டுவிட்டது. தொடர்ந்து நிலங்களைக் கையகப்படுத்தி நிலக்கரி எடுத்தால் கடலூர் மாவட்டமே பாலைவனம் ஆகிவிடும் எனக் கூறி என்.எல்.சி நிறுவனம் நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்தும், என்.எல்.சி நிறுவனம் வெளியேற வலியுறுத்தியும் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் 7,8 ஆகிய இரண்டு நாட்களாக நெய்வேலி அருகிலுள்ள வானதிராயபுரம், தென்குத்து, தொப்பளிக்குப்பம், வடக்குவெள்ளூர், ஆதண்டார்கொல்லை மற்றும் கம்மாபுரம் அருகிலுள்ள வளையமாதேவி, கரிவெட்டி, கத்தாழை, மும்முடிச்சோழகன் ஆகிய பகுதிகளில் விழிப்புணர்வு நடைப்பயணம் மேற்கொண்டார். 

 

"So far it has been calm.. Now it will be tough.." - Anbumani

 

இந்த நடைப்பயணத்தின் போது அவர் பேசுகையில், “கடந்த காலங்களில் என்.எல்.சிக்காக வீடு, நிலம் கொடுத்த மக்களை ஏமாற்றிய என்.எல்.சி மீண்டும் நிலங்களைக் கையகப்படுத்தி விவசாயிகளை அகதிகளாக்க முயல்கிறது. அதை முறியடிப்பதற்காகவே 2 நாள் நடைப் பயணத்தை மேற்கொண்டுள்ளேன். இது ஒரு சாதாரண பிரச்சனை கிடையாது. 49 கிராம மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை. என்.எல்.சி கடந்த 66 ஆண்டு காலங்களில் கிட்டத்தட்ட 37 ஆயிரம் ஏக்கர் விலை நிலங்களை எடுத்துவிட்டது. நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை கொடுக்கவில்லை. போதுமான இழப்பீடும் கொடுக்கவில்லை. என்.எல்.சி இங்குள்ள விவசாயிகளை அகதிகளாக்கி, விளைநிலங்களை அபகரித்து, அதில் நிலக்கரி எடுத்து சம்பாதித்து தமிழ்நாட்டிற்கு எதுவும் செய்யவில்லை. கடலூர் மாவட்ட மக்களுக்கும், நிலம் கொடுத்தவர்களுக்கும் கூட எதுவும் செய்யவில்லை. 55 ஆயிரம் கோடியளவுக்கு இங்கு சம்பாதித்துவிட்டு வட மாநிலங்களில் முதலீடு செய்கின்றனர். வட மாநிலத்தவர்க்கு வேலை கொடுக்கின்றனர். 

 

சமீபத்தில் கூட 299 பொறியாளர்களைத் தேர்வு செய்தார்கள். அதில் ஒருவர் கூட நிலம் கொடுத்தவர்கள் இல்லை. அவ்வளவு ஏன் ஒரு தமிழர் கூட இல்லை. எதற்காக நாங்கள் நிலங்களைக் கொடுக்க வேண்டும்? நிலம் கொடுத்த மக்களுக்கோ, மாவட்ட மக்களுக்கோ, தமிழ்நாட்டிற்கோ எந்த வகையிலும் பயனளிக்காத என்.எல்.சி தமிழ்நாட்டிற்குத்  தேவை இல்லை, வெளியேற வேண்டும்.

 

"So far it has been calm.. Now it will be tough.." - Anbumani

 

40 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மண்ணில் பத்தடியில் தண்ணீர் கிடைத்தது. ஆர்ட்டிசியன் என சொல்லக்கூடிய 'தன்னூற்று' என தண்ணீர் பூமிக்கு மேலெழும்பக் கூடிய பகுதியாக இருந்தது. ஆனால் தற்போது கடலூர் மாவட்டம் முழுவதுமே நிலத்தடி நீர் மட்டம் அதல பாதாளத்திற்குச் சென்றதற்கு காரணம் என்.எல்.சி தான். முப்போகம் விளையக்கூடிய இந்த மண்ணில் நெல், கரும்பு, வாழை, முட்டைக்கோஸ் என செழுமையாக விவசாயம் செய்து, விவசாயிகள் ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுகின்றனர். அப்படிப்பட்ட இந்த மண்ணை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்று என்.எல்.சி முயல்கிறது. ஒரு பிடி மண்ணைக் கூட என்.எல்.சி கைப்பற்ற நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.

 

ஏற்கனவே என்.எல்.சியால் நிலத்தடி நீர் பாதிப்பு,  விவசாயம் பாதிப்பு, கடலூரிலுள்ள சிப்காட் தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு, பரங்கிப்பேட்டையில் சைமா சாயப்பட்டறை தொழிற்சாலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு என கடலூர் மாவட்டமே பாலைவனமாகும் சூழல் உள்ளது" என்றார்.

 

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எங்கள் பாட்டன், பூட்டன் வாழ்ந்த இடம். எங்கள் வருங்கால சந்ததி வாழ வேண்டிய இடம். எங்களின் அடையாளம் இது. எங்கள் வீடு, எங்கள் கோயில் எல்லாம் இங்கே இருக்கும்போது நாங்கள் ஏன் எங்கேயோ சென்று அகதி போல வாழ வேண்டும்? என மக்கள் கொதித்து இருக்கிறார்கள். மறுபுறம் கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் காலநிலைக் கொள்கை ஒன்றை முதலமைச்சர் வெளியிட்டார். அதன்படி 2040ஆம் ஆண்டிற்குள் ஜீரோ கார்பன் திட்டத்தை வெளியிட்டு இருக்கிறார்கள். அதன்படி புதிய அனல்மின் நிலையங்கள் தொடங்கவோ, நிலக்கரி எடுப்பதற்கோ அனுமதி அளிக்கக்கூடாது. இன்னும் 18 ஆண்டுகளில் ஜீரோ கார்பன் நிலையை எட்டுவோம் என முதலமைச்சர் கூறியிருக்கும் நிலையில், 25 ஆயிரம் ஏக்கர் விலை நிலங்களைப் பறித்து என்.எல்.சிக்கு கொடுக்க அமைச்சர்கள் துடிப்பது ஏன்? முதலமைச்சர் வெளியிட்ட கொள்கைக்கு நேர் எதிராக அமைச்சர்கள் செயல்படுகிறார்கள். மக்களை மிரட்டுகிறார்கள், உங்கள் பிள்ளைகள் படிக்க முடியாது வழக்கு போடுவோம் என அச்சுறுத்துகிறார்கள். முதலமைச்சரின் காலநிலை கொள்கைகளுக்கு முரணாக கையகப்படுத்த நினைப்பது தவறான போக்கு. 

 

"So far it has been calm.. Now it will be tough.." - Anbumani

 

மறுபுறம் மத்திய அரசும் 2070க்குள் இந்தியாவில் ஜீரோ கார்பன் நிலையை எட்டுவோம் என அறிவித்திருக்கிறது. அதேபோல உலக அளவில் 2015ல் பாரிஸ், கிளாஸ்கோவில் நடந்த COP 26 மாநாடு, எகிப்தில் நடைபெற்ற COP 27 மாநாடு ஆகியவற்றில் இந்தியா கலந்து கொண்டு கார்பன் வெளியீட்டை குறைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்வோம் எனத் தெரிவித்திருக்கிறது. அதேபோன்று பசுமை இல்லாத வாயுக்களை வெளியிடும் நிலத்திற்குக் கீழிருந்து கிடைக்கும் எரிபொருட்களான நிலக்கரி, பெட்ரோல், டீசல், மீத்தேன், ஈத்தேன் போன்றவற்றின் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலம் புவி வெப்பமடைவதைக் குறைப்போம் எனத் தெரிவித்திருக்கிறது. 

 

மாநில அளவிலும், மத்திய அளவிலும் ஜீரோ கார்பன் கொள்கையை வைத்திருக்கும் நிலையில், 25 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களை ஏன் கைப்பற்ற வேண்டும்? அதற்காகத்தான் போராடுகிறேன். ஆனால் பிற கட்சிகளைச் சார்ந்தவர்கள் ஏன் போராடவில்லை? கோவை மாவட்டம் அன்னூரில் 1500 ஏக்கர் விளைநிலங்கள் எடுப்பதை எதிர்த்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போராட்டம் நடத்துகிறார். அறிக்கை வெளியிடுகிறார். பா.ஜ.க தலைவர் அண்ணாமலை போராட்டம் நடத்துகிறார். அதேசமயம் இங்கு 25 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் அபகரிக்கப்படுவதற்கு எதிராக ஏன் பேசவில்லை? ஏன் போராடவில்லை? ஆட்சி நடத்தும் தி.மு.கவின் நிலைப்பாடு என்ன? அன்னூருக்கு ஒரு நியாயம், நெய்வேலிக்கு ஒரு நியாயமா?

 

உலக அளவில் காலநிலை மாற்றம் எவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது? அமெரிக்காவில் சமீபத்தில் ஏற்பட்ட கடும் குளிரில் 100 பேர் இறந்திருக்கிறார்கள். கடந்த வருடம் கனடாவில் ஏற்பட்ட அதிகப்படியான வெப்ப நிலையில் 1500 பேர் இறந்தார்கள். ஐரோப்பாவில், சீனாவில் மூன்று மாதங்களுக்கு முன்பு கடுமையான வறட்சி நிலவியது. அதே சமயம் மறுபுறம் பாகிஸ்தான், பெங்களூரில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இன்னும் பத்து ஆண்டுகளில் கடுமையான வறட்சி தமிழகத்திலும் ஏற்படக்கூடும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விளைநிலங்களைப் பாதுகாக்க வேண்டும். என்.எல்.சி 1987களில் கையகப்படுத்திய 10 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. அதனைக் கொண்டு இன்னும் 40 ஆண்டுகளுக்கு நிலக்கரி எடுக்கலாம். ஜீரோ கார்பன் கொள்கையிலிருக்கும் நிலையில், மின் உற்பத்திக்கு புதிய தொழில் நுட்பங்கள் வந்துவிட்ட நிலையில் என்.எல்.சி நிலக்கரி  நிறுவனங்கள் தேவைப்படாது.

 

என்.எல்.சி செயல்படாவிட்டால் தமிழ்நாடு இருண்டுவிடும் என்ற ஒரு கட்டுக்கதையை பரப்பி வருகிறார்கள். தமிழகத்தின் ஒரு நாள் மின் தேவை 18000 மெகாவாட், என்.எல்.சி 2000 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்கிறது. அதில் 40% மட்டுமே மாநில அரசுக்கு கொடுக்கப்படுகிறது. 40 சதவீதம் என்றால் 800 மெகாவாட். 800 மெகாவாட் கொடுக்கவில்லை என்றால் தமிழகம் இருண்டு விடுமா? 60% உற்பத்தியை மத்திய அரசுக்குத்தான் என்.எல்.சி வழங்கிக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட என்.எல்.சிக்கு சாதகமாக அமைச்சர்களும், மாவட்ட நிர்வாகமும்  செயல்படாமல் விவசாயிகளுக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டும்.

 

இதுவரை நாங்கள் கருத்துக் கேட்பு, ஆர்ப்பாட்டம், நடைப்பயணம் என அமைதியான போராட்டங்களைத் தான் நடத்தி வருகிறோம். இனிமேலும் அமைச்சர்கள், நிர்வாகங்கள் மக்களை அச்சுறுத்தி நிலங்களை அபகரிக்க முயன்றால் கடுமையான போராட்டங்களை நடத்த வேண்டி இருக்கும். எனவே என்.எல்.சியை மூடிவிட்டு வெளியேறுங்கள்.

 

என்.எல்.சியை 2025-ல் தனியாரிடம் ஒப்படைக்கப் போவதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது. நிலக்கரி வெட்டி எடுப்பதில் முன்னணியில் இருக்கும் ஒரு 'ஏ' (அதானி குழுமம்) கம்பெனி அதை வாங்கப் போவதாகவும் சொல்லிக் கொள்கிறார்கள். இன்னும் 2 ஆண்டுகளில் தனியாருக்கு தாரை வார்க்க உள்ள நிலையில் எதற்காக 25 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களைக் கையகப்படுத்த வேண்டும்” என்றார். 

 

“இதுவரை பலகட்ட போராட்டங்கள் நடத்திய உங்களிடம் என்.எல்.சி பேச்சுவார்த்தை நடத்தியதா?” என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “அந்த நிறுவனமே தேவையில்லை என்கிற போது அந்த நிறுவனத்திடம் நான் ஏன் பேச வேண்டும்? அந்த நிறுவனம் வெளியேற வேண்டும் என்பதுதான் என்னுடைய கோரிக்கையும் போராட்டமும்” எனப் பதிலளித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்