தென்காசியை அடுத்த இலஞ்சி பகுதியின் கொட்டாகுளம் ஏரியாவைச் சேர்ந்த வினித், அதே பகுதியில் வசித்து வந்த குஜராத்தை பூர்விகமாகக் கொண்ட கிருத்திகா பட்டேலை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த திருமணத்திற்கு பெண் வீட்டார் கடுமையாக எதிர்த்துள்ளனர். இதனைத் தொடர்ந்து 25ம் தேதி கிருத்திகாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கிருத்திகாவை வீடு புகுந்து கடத்திச் சென்றனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து கிருத்திகாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீது தென்காசி காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் பதியப்பட்டது. இதில் தொடர்புடைய 13 பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கிருத்திகாவின் பெற்றோர் உள்பட 8 பேர் தலைமறைவாக உள்ளனர். இதனிடையே தன்னுடைய மனைவியை மீட்டுக் கொடுக்கும்படி வினித் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் ஜாமீன் கோரியும், தலைமறைவாக உள்ள கிருத்திகாவின் பெற்றோர்கள் முன் ஜாமீன் வழங்கக் கோரியும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு இன்று நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது, ‘இளம்பெண் கிருத்திகாவே குற்றவாளியாக இருக்க வாய்ப்புள்ளதால் விசாரணைக்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது. இளம்பெண்ணை கடத்திய போது சினிமா காட்சிகளை போல அடுத்தடுத்து 5 கார்களில் கேரளா சென்று அங்கிருந்து குஜராத் சென்றுள்ளனர்’ என்று காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது. இதனைக் கேட்ட நீதிபதி ‘இது என்ன சினிமாவையே மிஞ்சும் அளவுக்கு இருக்கிறது என்று கருத்து தெரிவித்ததோடு, அரசு தரப்பின் கோரிக்கையை எற்று அடுத்த வாரத்திற்கு வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டார். அதோடு வழக்கு தொடர்பாக ஆட்கொணர்வு மனு விசாரணையில் உள்ளதால் கடத்தலில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஜாமீனோ முன் ஜாமீனோ வழங்கக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளனர்.