கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனியார் மருத்துவமனைகளில் 50% படுக்கைகளை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது முறையாகப் பின்பற்றப்படவில்லை; எனவே, முறையாகப் பின்பற்ற உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று (06/05/2021) நீதிபதிகள் எம்.எம். ரமேஷ், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த நீதிபதிகள், "தனியார் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளிடம் அதிக பணம் பெறுவது மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. தமிழகத்தில் கரோனா நோயாளிகளிடம் தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் பெறுவதை அரசு முறைப்படுத்த வேண்டும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் தொடர்பான விவரங்கள் வெளிப்படையாக இருந்தால் மக்களுக்கு அது உதவும். படுக்கை எண்ணிக்கையை இணையதளத்தில் பதிவேற்றினால் எளிய மக்களுக்குப் படுக்கைகள் கிடைப்பது உறுதி செய்யப்படும். அரசு நிர்ணயித்த கட்டணத்தை தனியார் மருத்துவமனைகள் வசூல் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும்" என்று கூறிய நீதிபதிகள், இது தொடர்பாக பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மே 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.