Skip to main content

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு; சென்னைக்கு மாற்றி உத்தரவு

Published on 28/06/2023 | Edited on 28/06/2023

 

 Madurai High Court branch  has ordered transfer of a case related to Senthilbalaji to Madras High Court

 

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். அதேசமயம் அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக அவர் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு நீதிமன்றத்தின் அனுமதியோடு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவக்குழு கண்காணிப்பில் உள்ளார். 

 

இதற்கு முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் உள்ளதால், அவரை விடுவிக்கக் கோரி அவரது மனைவி மேகலா, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த மனுவைக் கடந்த வாரம் விசாரித்த நீதிமன்றம், செந்தில் பாலாஜி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி வழங்கியது. அதே சமயம் அமைச்சர் நீதிமன்றக் காவலில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டது. அமலாக்கத்துறையினர் தங்கள் மருத்துவக் குழுவினரைக் கொண்டு பரிசோதனை செய்து கொள்ளவும் அனுமதி வழங்கியது. செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது பதிலளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு மனு மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. 

 

இதனைத் தொடர்ந்து நேற்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறை சார்பில் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இதற்கு செந்தில் பாலாஜி தரப்பில் இருந்தும் பதில் வாதம் வைக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். 

 

இந்த நிலையில் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு ஒன்றை உயர்நீதிமன்ற மதுரை கிளை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் என்பவர், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்வதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தொடர்பான விசாரணை இன்று வந்தபோது, செந்தில் பாலாஜி தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் இந்த வழக்கையும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கே மாற்றி நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு வரும் பட்சத்தில் வழக்கறிஞர்களின் கோரிக்கையை ஏற்று இந்த வழக்கையும் சேர்த்து பட்டியலிட பரிந்துரைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்