புதுமணத் தம்பதிகளுக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் விதத்தில் மதுரை கோட்ட ரயில்வே புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
புதுமணத் தம்பதிகள் தங்களது திருமணத்திற்கு பிறகோ முன்போ மலை வாழிடங்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் இயற்கை சூழலில் போட்டோ சூட் நடத்துவது அதிகரித்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு வருவாயை அதிகரிக்கும் முயற்சியில் ரயில்வே இறங்கியுள்ளது. அந்த வகையில் மதுரை ரயில் நிலையத்தில் புதுமணத் தம்பதிகள் போட்டோ ஷூட் நடத்திக்கொள்ள அனுமதி வழங்கி உள்ளது. இதற்கு என தனியாக கட்டணங்களை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்ட ட்விட்டர் பதிவில், "மதுரை ரயில் நிலையத்தில் புதுமணத் தம்பதியர் ரூபாய் 5000 கட்டணம் செலுத்தி பல புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளலாம். ரயில் பெட்டி பின்புலம் வேண்டுமென்றால் கூடுதல் கட்டணம் ரூபாய் 1500. மற்ற ரயில் நிலையங்களுக்கான கட்டணம் ரூபாய் 3000 (ரயில் பெட்டிக்கு கூடுதலாக ரூபாய் 1000)" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வேயின் இந்த தகவலானது போட்டோ சூட் நடத்துபவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.