மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 17 பேரின் வாரிசுகளுக்கு அரசுப் பணி நியமன ஆணையை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திமுக எம்.பி. கனிமொழி, அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, அனிதா ராதாகிருஷ்ணன், பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி நடந்த போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயமடைந்தோரின் குடும்ப வாரிசுகளுக்கு மதுரையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.
வாரிசுகளுக்கு ஏற்கனவே அரசு வேலை தரப்பட்ட நிலையில், கல்வித்தகுதி அடிப்படையில் தற்போது பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதைத் தொடர்ந்து, மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் அருகே உள்ள தோப்பூரில் ஆக்சிஜன் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள 500 படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மையத்தைத் திறந்து வைத்த முதல்வர் மு.க. ஸ்டாலின், அங்கு கரோனா நோயாளிகளுக்காக செய்யப்பட்டுள்ள மருத்துவ வசதிகள் உள்ளிட்டவற்றைப் பார்வையிட்டார்.
முன்னதாக, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினத்தையொட்டி கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழியை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்றார்.