
மது, லஞ்சம், கந்துவட்டி ஆகிய சமூகத்தீமைகளை முற்றிலும் ஒழித்தால்தான் நாடு வளர்ச்சி அடையும் என்று பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ள மதுரை சின்னப்பிள்ளை கூறினார்.
சேலத்தில், ஏஸ் பவுண்டேஷன் என்ற பெயரில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் கூட்டமைப்பு தொடக்கவிழா சனிக்கிழமை (பிப்ரவரி 9, 2019) நடந்தது. மதுரையைச் சேர்ந்த களஞ்சியம் மகளிர் சுய உதவிக்குழுக்களின் தூதரும், ஏற்கனவே ஸ்த்ரீ புரஸ்கார் விருது பெற்றவரும், பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவருமான சின்னப்பிள்ளை, குத்துவிளக்கேற்றி கூட்டமைப்பை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ‘’கடந்த 1990ம் ஆண்டிலிருந்து களஞ்சியம் என்ற மகளிர் சுயஉதவிக்குழுவை தொடங்கி, செயல்பட்டு வருகிறேன். நாடு முழுவதும் எங்கள் அமைப்பில் 8 லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். மகளிர் சுய உதவிக்குழுக்களில் சேர்வதற்கு முன், நான் உள்பட பல பெண்களுக்கு நேரடியாக வங்கிகளுக்குச் செல்வதோ, காவல்நிலையம், ரயில் நிலையம் போன்ற பொது அலுவலகங்களுக்கு செல்வது குறித்த அறிவும், துணிச்சலும் இருந்ததில்லை.
ஆனால் இன்றைக்கு அந்த நிலையெல்லாம் அடியோடு மாறிவிட்டது. வங்கிகள் முதல் எந்த ஒரு பொது இடங்களுக்கும் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் துணிச்சலுடன் செல்கிறார்கள். அந்தளவுக்கு அவர்களுக்கு விழிப்புணர்வு வந்துவிட்டது. வறுமையில் இருந்தும் மீண்டு வந்திருக்கின்றனர். சிறுசேமிப்பு மற்றும் கல்விக்கடனுதவிகள் மூலம் தங்கள் பிள்ளைகளை படிக்க வைத்திருக்கின்றனர்.

எங்கள் அமைப்பில் உள்ள 8 லட்சம் குடும்பங்களில் சுமார் 2 லட்சம் குடும்பங்கள் மதுவினால் பாதிக்கப்பட்டு உள்ளன. இங்கே மதுவும், கந்துவட்டியும், லஞ்ச லாவண்யமும் பெரும் சமூகத்தீமைகளாக உள்ளன. இவற்றை முற்றிலும் ஒழித்தால்தான் நாடு முழுமையான வளர்ச்சி அடையும்.
மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு முன்பு கல்விக்கடன் உதவித்தொகை திட்டத்தை எல்.ஐ.சி மூலம் மத்திய அரசு செயல்படுத்தி வந்தது. இப்போது அந்த திட்டம் நிறுத்தப்பட்டுவிட்டது. மீண்டும் அத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.’’ இவ்வாறு சின்னப்பிள்ளை கூறினார்.
ஏஸ் பவுண்டேஷன் அமைப்பின் தலைவர் பா.சிவராணி கூறுகையில், ''சேலம் மாவட்டத்தில் மட்டும் எங்கள் அமைப்பில் 3385 மகளிர் சுய உதவிக்குழுக்களில் 52 ஆயிரம் பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த 600 பேர் இதுவரை குடிப்பழக்கத்தினால் மரணம் அடைந்துள்ளனர். அவர்களில் 100 பேர் பெண்கள். மதுவையும், லஞ்சத்தையும் கண்டிப்பாக ஒழிக்கப்பட வேண்டும். நாடு முழுவதும் இயங்கும் சுய உதவிக்குழுக்களை ஒருங்கிணைக்கும் திட்டமும் உள்ளது’’என்றார்.