கடந்த 22.04.2019-ல், ‘சிறைத்துறை ஒழுங்கீனங்கள்!- மத்திய சிறை ஒன்றில் மட்டமான செயல்கள்!’ என்னும் தலைப்பில் நக்கீரன் இணையத்தில் வெளியான செய்தியில், மதுரை மத்திய சிறையில் வார்டனாகப் பணிபுரியும் சுந்தரபாண்டியன் குறித்து கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தோம்.
‘பெண் கைதிகளைப் பார்ப்பதற்கு வரும் உறவுக்காரப் பெண்களை ‘மதினி’ என்றழைக்கும் சுந்தரமான ஒரு வார்டனின் தவறான தொடர்புகளால் அவ்வப்போது பிரச்சனைகள் எழுவதுண்டு. இரவு நேரங்களில் மகளிர் சிறைகளுக்குப் ஃபோன் செய்து, இரட்டை அர்த்தத்தில் பேசி அவர் ஜொள்ளு விடுவது வாடிக்கையாக நடப்பதுதான். மாவட்டச் சிறைகளில் இருந்து மாமூல் பெறுவதிலும் இவர் கில்லாடி.’
தற்போது, மதுரை மத்திய சிறை விஜிலன்ஸ் பிரிவு, முதன்மை தலைமை வார்டன் சுந்தரபாண்டியன், மாற்றுப் பணி அடிப்படையில் பணிபுரிந்து வந்ததற்கான உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், அவரை உளவுப் பிரிவிலிருந்து விடுவித்து, வேலூர் சிறையில் பணி செய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதுரை மத்திய சிறை வட்டாரத்திலோ “உத்தரவில், என்ன காரணத்துக்காக சுந்தரபாண்டியன் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்படவில்லை. ஆனாலும், நக்கீரன் சுட்டிக்காட்டிய குற்றச்சாட்டுகளின் நீட்சியாக, சமீபத்திலும் ஒரு பெண் காவலரிடம் டபுள் மீனிங்கில் பேசி, அது டி.ஐ.ஜி. வரை புகாராகச் சென்றது. மேலும், மேலூர் – வெள்ளாளப்பட்டி புதூர் மந்தை திடல் அருகே அனுமதியின்றி வைக்கப்பட்ட தேவர் சிலையை அகற்றுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியபோது, தாக்குதல் நடத்தியவர்கள் கைதாகி, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை சிறையில் பார்ப்பதற்கு, முக்கியப் பிரமுகர் ஒருவருக்கு ‘ஏற்பாடு’ செய்தார் என்ற புகாரும் போனது. வேறு சில காரணங்களும் உண்டு” என்கிறார்கள்.
ஒழுங்கீனங்களில் ஈடுபடுவோர் மீது சிறைத்துறை எடுக்கும் நடவடிக்கைகளால், சிறைகள் சுத்தமானால் சரிதான்!