தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், “தமிழகத்தில் உள்ள பல கோயில் வளாகங்கள், பேருந்து நிலையங்களில் ஆதரவற்ற முதியவர்கள் தங்கியுள்ளனர். எனவே மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின் படி தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் தோறும் ஆதரவற்ற முதியோர் காப்பகம் அமைக்க உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரிய கெளரி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (09.09.2024) விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், “சட்டப்படி மாவட்டத்தில் ஒரு முதியோர் இல்லமாவது அரசால் நடத்தப்பட வேண்டும். தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களால் இத்தகைய இல்லங்கள் நடத்தப்படுவது விதிமீறும் செயல் ஆகும். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது ஒரு முதியோர் இல்லத்தையாவது கட்டுவதற்கான பணிகளை 6 மாதத்திற்குள் தொடங்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவைப் பிறப்பிக்கிறது” எனத் தெரிவித்தனர்.