தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, பாஜக பிரதிநிதி போல சனாதனக் கொள்கைகளையும், தமிழக அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும் பேசி வருவது தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது என தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நேற்று நடந்த சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு சென்றிருந்த ஆளுநர் ஆர்.என். ரவிக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஆவின் திமுக தொழிற்சங்கத் தலைவரான மதுரையைச் சேர்ந்த கணேசன், நேற்று ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் எனக் கலைஞர் சிலைக்கு முன்பாக தீக்குளிக்க முயன்றார்.
மதுரை மாவட்டம், மானகிரி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவர் ஆவின் தி.மு.க தொழிற்சங்க தலைவராக இருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு கணேசன், மதுரை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆளுநரை மாற்றவில்லை என்றால் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்வேன் என போஸ்டர் அடித்திருந்தார்.
அந்தப் போஸ்டரில், ‘தமிழக ஆளுநரை ஜூன் 27 ஆம் தேதிக்குள் மத்திய அரசு மாற்றாவிட்டால், அதற்கு அடுத்த நாளான ஜூன் 28 ஆம் தேதி சிம்மக்கல் பகுதியில் உள்ள கலைஞர் சிலை முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்து இறந்து விடுவேன்’ என்று குறிப்பிட்டிருந்தது. இந்த போஸ்டர் மதுரை மாவட்டத்தில் உள்ள மக்கள் மத்தியிலும், திமுக நிர்வாகிகள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த போஸ்டரைக் கண்ட மதுரை மாவட்ட திலகர் திடல் போலீசார், ஜூன் 28 ஆம் தேதி சிம்மக்கல் கலைஞர் சிலை முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். போஸ்டரில் இருந்தது போலவே, கலைஞர் சிலை இருக்கும் பகுதிக்கு வந்த கணேசன் திடீரென தான் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெய்யை தன் உடலின் மீது ஊற்றினார். உடனே அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸார் அவரிடம் இருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை பறித்து, அவர் மீது தண்ணீர் ஊற்றி அவரை மீட்டனர்.
பின் கணேசனை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலீஸார் அனுமதித்தனர். மேலும், தற்கொலைக்கு முயன்றதாக திலகர் திடல் காவல்துறையினர், கணேசன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.