Skip to main content

ஐ.ஐ.டி மாணவர்கள் தற்கொலை வழக்கு- உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஒத்திவைப்பு!

Published on 03/12/2019 | Edited on 03/12/2019

சென்னை ஐஐடி-யில் 2006- ஆம் ஆண்டு முதல் நடந்த 14 மாணவர்களின் தற்கொலைகள் தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்தது. 
 

சென்னை ஐஐடி-யில் படித்து வந்த கேரள மாநிலத்தை சேர்ந்த மாணவி பாத்திமா லத்திப் நவம்பர் 9- ஆம் தேதி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் சந்தேக மரணம் என்ற பிரிவில் பதிவான வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு விசாரித்து வருகிறது. இதுதவிர மற்ற மாணவ மாணவிகள் மரணம் தொடர்பான வழக்குகள் சிபிசிஐடி விசாரணையில் உள்ளது.

madras iit incident cbi investigation judgement postponed high court


இந்நிலையில், 2006 முதல் 14 மாணவர்கள் தற்கொலை மரணங்கள் நடந்துள்ளதால், அந்த வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி லோக் தந்திரிக் ஜனதா தளம் கட்சியின் இளைஞர் அணியின் தேசிய தலைவரான கேரளா கோழிக்கோட்டை சேர்ந்த சலீம் மடவூர் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
 

இந்த வழக்கு இன்று (03.12.2019) நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஐ.ஐ.டி.யில் ஜாதி ரீதியாகவும், மத ரிதியாகவும், ஆங்கில புலமை பெற்றவர்களாலும் மாணவர்கள் துன்புறுத்தப்பட்டுள்ளார்கள் என்றும், பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அதிகளவில் துன்புறுத்தல்களும், கொடுமைகளும் நடந்து வருவதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளதால், இந்த மரணங்கள் குறித்த உண்மையை வெளிக்கொண்டு வர இந்த வழக்குகளின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

chennai iit


அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பாத்திமாவின் செல்போன் ஆய்வு செய்யப்பட்டு வரும் நிலையில், முழுமையான விசாரணை அறிக்கைக்கு காத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
 

இதையடுத்து, மாணவர்களின் தற்கொலைகள் ஐ.ஐ.டி. வளாகங்களில் மட்டும் தான் நடைபெறுகின்றனவா என சந்தேகம் எழுப்பிய நீதிபதிகள், பாத்திமா மரணம் தொடர்பான வழக்கை ஏன் சிபிசிஐடிக்கு மாற்ற கூடாது என அரசிடம் கேள்வி எழுப்பினர்.
 

மேலும், பாத்திமா மரணம் தொடர்பான வழக்கை தற்போது சென்னை மத்திய குற்றப்பிரிவினர் முழுமையாக விசாரித்து முடிக்காத நிலையில், விசாரணையை சிபிஐக்கு மாற்றுவது யூகங்களின் அடிப்படையில் விசாரணையை சிபிஐக்கு மாற்ற முடியாது என கருத்து தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.



 

சார்ந்த செய்திகள்