காலநிலை மாற்றம் காரணமாக உருமாறும் வைரஸ்கள் பரவலால், சில காலம் அடங்கியிருந்த ‘மெட்ராஸ் ஐ’ திரும்பவும் பரவ வேகமெடுக்கிறது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் குறிப்பாக குழந்தைகள், சிறுவர்கள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. வலி மற்றும் கண்களில் தொடர் நீர்வடிதல் காரணமாக புரிதலின்றி அடிக்கடி கண்களைக் கசக்குவது அதன் வலியை அதிகப்படுத்துகிறதாம்.
மேலும், தொற்றுநோய் போன்று வேகமாக பரவும் தன்மை கொண்ட இந்த நோயால் பள்ளி மாணவர்கள், குழந்தைகள் மற்றும் வயது வித்தியாசமின்றி பலரும் பாதிக்கப்படுகின்றனர். இதைத் தவிர்ப்பதற்கும், கண் கூச்சத்தைத் தடுப்பதற்கும் பலர் கண்களில் கருப்பு கண்ணாடியும் அணிந்தவாறு செல்வதைக் காணமுடிகிறது. மக்கள் மத்தியில் இந்த நோய்ப்பரவல் சற்று அதிகமாகவே காணப்படுவதால் சுகாதாரத்துறையினர் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் சார்பிலும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
இது குறித்து தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் நகர அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவரும், கண் டாக்டருமான அகிலாண்ட பாரதி கூறும்போது, “ஒரு வகையான வைரஸ் கிருமியால் தான் இந்நோய் பரவுகிறது. மிகுந்த வெப்பச்சூழல் காலம் முடிந்தவுடன், தொடர் மழை தொடங்கி பருவநிலை மாற்றம் காரணமாகவே வைரஸ் கிருமியால் கண் நோய் பரவுகிறது. குறிப்பாக குழந்தைகள், சிறுவர்களே இதனால் அதிகம் பாதிப்புக்குள்ளாகிறார்கள். கண்நோய் வந்த ஒருவரைப் பார்த்தாலே மற்றவர்களுக்கு வந்து விடும் என்று சொல்ல முடியாது. கண்ணில் வடியும் நீரை அடிக்கடி கர்ச்சீப் கொண்டு துடைப்பது. கண்களைக் கைகளால் கசக்குவதும், அப்படியே பேனா, பென்சில்களை அடுத்தவர்க்கு கொடுப்பதன் மூலம் பரவும் வைரஸ்களால் தான் கண்நோய் பரவுகிறது. க்ளைமேட் சேன்ஜ் காரணமாக குறையாமல் அதிகம் காணப்படுகிறது. இந்நோய் கொண்டவர்களுக்கு சளியும் இருமலும் இருக்கும்.
கடந்த 10 வருடமாக இல்லாமலிருந்தது. ஆனால், தற்போது கிளைமேட் காரணமாக உருமாறிய தீவிரமான கிருமி காரணமாக பரவல் உள்ளது. பாக்டீரியா என்றால் உடம்பில் தொற்றாகி 12 மணி நேரம் கழித்தே பரவும். ஆனால் இந்த வைரஸ் உடலில் பரவிய 2 – 3 மணி நேரத்திற்குள்ளாகவே நோய் ஏற்பட்டுவிடும். உடலில் எதிர்ப்பு சக்தி ஏற ஏற இந்த வைரஸ் தன்னுடைய ஸ்டெக்சரை மாற்றி்க் கொண்டே இருக்கும். கண்நோய் இரவு ஒருவருக்கு வந்தால், காலையில் எழுந்திரிக்கும் போது மற்றவர்களுக்கும் வந்து விடும். கர்ச்சீப் கொண்டு துடைக்கவோ கண்களைக் கசக்கவோ கூடாது. சுய மருத்துவம் செய்தல் கூடாது. பார்மஸிகளில் கிடைக்கும் காட்டன் பஞ்சு கொண்டு கண்ணில் வடியும் நீரைத் துடைக்க வேண்டும். அப்படிச் செய்தால் மூன்று அல்லது ஐந்து நாட்களில் சரியாகிவிடும். கண்மருத்துவரின் பரிந்துரைப்படி கண்களில் போடப்படும் சொட்டு மருந்துகள் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி நோயைக் குணப்படுத்தும். பிற நோயும் அண்டாது கண்களைப் பக்குவமாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்” என்கிறார்.