உடல்நலக் குறைவு காரணமாக ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் (80), நேற்று (05.08.2021) காலமானார். அவரது மறைவு அதிமுகவிற்குப் பெரும் இழப்பு என அதிமுகவினர் உட்பட அனைத்து தரப்பிலிருந்தும் இரங்கல்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்த ஜெயலலிதாவுக்கு ஷ்யூரிட்டி வழங்கியவரும், இ.பி.எஸ்.- ஓ.பி.எஸ்.ஸால் அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டவருமான பெங்களூரு புகழேந்தி, அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில், அவர் தெரிவித்திருப்பதாவது, “மதுசூதனன் என்கிற தலைவனின் மறைவு ஒரு பெரிய பேரிழப்பு ஆகும். அவர் அனைவரிடத்திலும் அன்போடு பழகியவர். எம்.ஜி.ஆர் வழியில் மற்றும் அம்மாவின் அரணாக அவர்களின் ஆணைக்கினங்க கழக பணிகளை செம்மையாக ஆற்றியவர். மேலும் பல நேரங்களில் அரசியல் எதிரிகளை எதிர்கொண்டவர்களுள் அண்ணன் மதுசூதனனும் ஒருவர். ஒரு நேரத்தில் பொதுக்குழுவில் அம்மா அமர்ந்திருந்த பொழுது அண்ணன் மதுசூதனன் உரையாற்றும் பொழுது ‘எங்களுக்கு பணம் வேண்டாம், பதவி வேண்டாம், பொறுப்புகள் வேண்டாம். இது போன்ற எதுவும் வேண்டாம் உங்களது புன்னகை முகம் இருந்தால் அது ஒன்றே எங்களுக்கு பெரிய சக்தியாக விளங்கும் ஆகவே மலர்ந்த முகத்தோடு, சிரித்த முகத்தோடு உங்களை எப்போதும் பார்க்க விரும்புகிறோம்’ என்று சொன்னார்கள்.
அப்படி இந்த கட்சியின் மீது அதிக பற்று வைத்திருந்த அண்ணன் இன்றைய தினம் நம்மைவிட்டு வெகு தூரம் சென்றுவிட்டார். அதே நேரத்தில் அவரின் கடைசி செயற்குழு கூட்டம் என்று நினைக்கிறேன், அதில் கூட கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும். இந்த கட்சியில் பிளவு ஏற்பட்டுவிட கூடாது. மேலும் இந்த கட்சியை நல்லப்படியாக எடுத்து செல்லுங்கள் என்று கூறும்பொழுது கண்ணீர் விட்டார். அவரது உடல் தளர்ந்திருந்தாலும், அவரது உள்ளமும், உறுதியும், கொள்கையும், கோட்பாடும் இறுதி வரை தளரவே இல்லை. அதற்குரிய தனிபெரும் தலைவனாக விளங்கினார். அம்மாவிற்கு பின்னால் சின்னம்மாவை கட்சியின் தலைமையை ஏற்க போயஸ் கார்டனில் சென்று அழைக்கும் பொழுதும், மற்ற நேரங்களிலும் கட்சியின் ஒற்றுமையை நினைவில் கொண்டு தொடர்ந்து அரசியல் பயணம் செய்வதிலும் அவரை போல் வேறு யாரும் இருக்க முடியாது.
தேர்தல் ஆணையம் கூட அவருடைய பெயரில் தான் கட்சியையும், சின்னத்தையும் உபயோகப்படுத்தி கொள்ளலாம் என்று ஆணையை வழங்கியது. அதற்கும் உரிய தலைவராக அவர் விளங்கினார். ஆகவே அன்பு அண்ணனின் மறைவு சொல்லமுடியாத துயரை ஏற்படுத்தியுள்ளது என்பதை வேதனையோடு தெரிவித்துக்கொள்கிறேன். அவர் நம்மோடு தான் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார், என்றும் வாழ்வார்” என கூறினார்.