சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், 4 வருட சிறை தண்டனை முடிந்து கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி சசிகலா விடுதலையானார். அவருடன் சிறையிலிருந்த இளவரசி பிப்ரவரி 5ஆம் தேதி விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் சிறையிலிருந்த காலகட்டத்தில் சொகுசு வசதிகள் செய்து தர லஞ்சம் தந்த புகாரில் பெங்களூர் நீதிமன்றத்தில் இன்று சசிகலா ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. இளவரசி, அனிதா, கிருஷ்ணகுமார் உள்ளிட்ட 6 பேரும் இன்று காலை 10 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருக்கிறது.
பரப்பன அக்ரஹார சிறையில் சொகுசு வசதிகள் செய்து தர அதிகாரிகளுக்கு சசிகலா 2 கோடி ரூபாய் லஞ்சம் தந்ததாகப் புகார் எழுந்தது. இந்தப் புகாரின் அடிப்படையில் சிறைத்துறை டிஐஜி ரூபா 2017ஆம் ஆண்டு அறிக்கை தாக்கல் செய்திருந்தார். அதேபோல் சமூக ஆர்வலர் கீதா தொடர்ந்த வழக்கில் கடந்த ஜனவரியில் கர்நாடக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பரப்பன அக்ரஹாரா சிறையில் சூப்பிரண்டாக இருந்த சோமசேகர், அனிதா உள்ளிட்ட அதிகாரிகள் நான்கு பேர் மீது விசாரணை நடத்த அரசு அனுமதி வழங்கியிருந்த நிலையில் பெங்களூர் நீதிமன்றத்தில் சசிகலா, இளவரசி ஆகியோர் இன்று நேரில் ஆஜராகினர்.