திண்டுக்கல் ஒன்றியத்திற்கு உட்பட்ட வாக்கு எண்ணிக்கை மையம் திண்டுக்கல்லில் எம்.வி.எம் மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெற்று வருகிறது.
இந்த வாக்கு எண்ணிக்கையில் அரசு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என 300க்கும் மேற்பாட்டோர் இன்று காலை முதல் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் காலை உணவே காலதாமதமாக வழங்கப்பட்டது. மதிய உணவாவது சரியான நேரத்தில் வழங்குவார்கள் என எதிர்பார்த்தனர். ஆனால் மணி 3.45 தொட்டும் பெரும்பாலானோர்க்கு மதிய உணவு வராததால் டென்ஷன் அடைந்த ஊழியர்கள், அலுவலர்கள் மதிய உணவும் இல்லையா என அதிருப்தியாக வாக்கு எண்ணிக்கையை புறக்கணித்துவிட்டு மையத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர். இதனைக்கண்ட மாவட்ட தேர்தல் அதிகாரிகள் சிலர் தடுத்தும்கூட நாங்கள் வெளியே சென்று சாப்பிட்டுவிட்டு வந்துதான் வாக்கு எண்ணிக்கை பணியை தொடருவோம் எனக்கூறி சென்றனர்.
ஏற்கனவே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் கல்லூரியில் ஆண்களும், பெண்களும் பெரும்பாலோனோர் இருந்த நிலையில் கழிவறையில் தண்ணீர் வசதி செய்துதரப்படவில்லை. குடிக்க குடிநீர், தேநீர் போன்றவை கொடுக்கப்படாததால் பணியாளர்களும், ஏஜெண்டுகளும் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள். தற்போது காவல்துறையினர் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.