
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடைய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம், புதுச்சேரி நோக்கி வரும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இன்றிலிருந்து 14 ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. நாளையும், நாளை மறுநாளும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்பொழுது வந்த தகவலின்படி காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவோ, தாழ்வு மண்டலமாகவோ சற்றே வலுவடைந்து தமிழகம் மற்றும் புதுச்சேரி நோக்கி வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்று ஒரு சில இடங்களில் கனமழைக்கும், நாளை தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் ஒரு சில இடங்களில் மிக கனமழை, இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.