புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையிலிருந்து 700 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இந்தப் புயலுக்கு ‘மாண்டஸ்’ எனப் பெயரிடப்படவுள்ள நிலையில் இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நெருங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு கன மற்றும் மிகக் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று 8ஆம் தேதி தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய அதிகனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப்படை மையத்திலிருந்து 10 மாவட்டங்களுக்கு மீட்புக்குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். (திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், காஞ்சிபுரம், திருவாரூர்)
தானே, வர்தா புயல்களைக் காட்டிலும் மாண்டஸ் புயலின் காற்றின் வேகம் குறைவாகவே இருக்கும் எனக் கூறப்படுகிறது. கனமழையுடன் நாளை துவங்கி காற்றின் வேகம் அதிகரித்து 10ம் தேதி கரையைக் கடக்கும் எனவும் கூறப்படுகிறது. புயல் கரையைக் கடந்த பின் 12, 13 தேதிகளில் மீண்டும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என்றும் கூறப்படுகிறது.