குமரி மாவட்டம் சென்னித்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதா (21 பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரும் பக்கத்து ஊரான கரவிளாகம் பகுதியைச் சேர்ந்த அனீஷும் (24) பள்ளி காலத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளனர். இதனிடையே சில தினங்களுக்கு முன்பு சங்கீதாவினுடைய பெற்றோர் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் தனது மகளை அனீஷ் கடத்திச் சென்றதாகப் புகார் தெரிவித்துள்ளனர். இந்த புகாரை அறிந்த அனீஷும் சங்கீதாவும் திருமணம் செய்த கையோடு காவல் நிலையத்திற்கு வந்துள்ளார்கள்.
அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ‘அனீஷும் சங்கீதாவும் பள்ளி காலம் முதலே காதலித்து வந்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் பள்ளிப் படிப்பு முடித்த சங்கீதா, தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு படித்து வந்திருக்கிறார். அதே நேரத்தில் 10 ஆம் வகுப்புடன் தனது படிப்பை முடித்துக் கொண்டு அனீஷ் வெளிநாட்டில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்துள்ளார். இதனால் இருவரும் தொலைப்பேசி மூலம் காதலித்து வந்ததாகத் தெரிகிறது.
இந்த காதலை அறிந்த சங்கீதாவின் பெற்றோர்கள், அனீஷ் மாற்றுச் சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால் கடுமையாகத் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்துள்ளனர். பெற்றோர்களின் எதிர்ப்பை மீறியும் காதலித்து வந்ததால் சங்கீதாவை கல்லூரிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே சிறைப்படுத்தி வைத்துள்ளனர். இதனிடையே, சங்கீதாவின் பெற்றோர்கள் சங்கீதாவிற்கு வேறு ஒரு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கியிருக்கின்றனர். இந்த சம்பவத்தை சங்கீதா தனது காதலனான அனீஷிற்கு தொலைப்பேசி மூலம் தெரிவித்து தன்னை உடனடியாகத் திருமணம் செய்யுமாறு வற்புறுத்தியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அனீஷ் 5 நாட்களுக்கு முன் வெளிநாட்டில் இருந்து தனது சொந்த ஊருக்குத் திரும்பி வந்துள்ளார். மேலும், தனது காதலி சங்கீதாவை வீட்டை விட்டுத் தப்பித்து வர கூறியிருக்கிறார். அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன் வீட்டை விட்டுத் தப்பித்து வெளியே வந்த அவர், தனது காதலனை கரவிளாகம் பகுதியில் உள்ள கோவிலில் மாலை மாற்றிக் கொண்டு திருமணம் செய்திருக்கிறார்.
காவல்துறையினரிடம் தங்களது காதலில் உறுதியாக இருப்பதாகவும் தங்களுக்கு அடைக்கலம் வேண்டும் எனவும் கூறியுள்ளனர். அதனால், காவல்துறையினர் பெற்றோர்களைச் சமாதானம் செய்து அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.