சிதம்பரத்தில் காதல் கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி பள்ளிவாசலில் கைக்குழந்தையுடன் பெண் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அம்பலத்தாடிமடத் தெருவைச் சேர்ந்தவர் ஆஷித் என்பவரது மகன், இப்ராஹீம் அஸ்லாம் (25). ஐஸ்கிரீம் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வேலைக்காகச் சென்ற கொத்தங்குடித் தெருவைச் சேர்ந்த சீனிவாசன் மகள் மகேஸ்வரி. 22 வயதான மகேஸ்வரியை காதலித்து திருமணம் செய்து கொள்வதாகக் கூறி இப்ராஹீம் அஸ்லாம் தனிமையில் இருந்துள்ளார்.
இந்நிலையில், கர்ப்பமான மகேஸ்வரி திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியபோது வீட்டில் வந்து கேட்குமாறு தெரிவித்துள்ளார். வீட்டில் சென்று கேட்ட போது இப்ராஹீம் அஸ்லாம் தந்தை ஆஷித் மறுப்பு தெரிவித்துள்ளார். இருந்தபோதிலும் மகேஸ்வரி 8 மாத கர்ப்பிணியாக இருந்தபோது இஸ்லாம் மதத்திற்கு மாற வேண்டும் எனக் கூறியதின் பேரில் மகேஸ்வரி இஸ்லாமியராக மதம் மாறி அவருக்கு ஆயிஷா என்ற பெயரும் வைக்கப்பட்டது. பின்னர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சிதம்பரம் லப்பை தெருவில் உள்ள பள்ளிவாசலில் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனை பள்ளிவாசல் ஜமாத்தார்கள் செய்துவைத்துள்ளனர்.
இந்நிலையில், ஜனவரி 16ம் தேதி மகேஸ்வரி என்கிற ஆயிஷாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து ஆயிஷாவின் கணவர் இப்ராஹீம் அஸ்லாம் தலைமறைவானதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தனது கணவரை அவரது தந்தை மறைத்து வைத்திருப்பதாக சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். மேலும் கணவருடன் சேர்த்து வைக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.
புகாரின் பேரில் மகளிர் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து கணவரிடம் சேர்த்து வைக்காததால், திருமணம் நடைபெற்ற லப்பை தெரு பள்ளிவாசல் முன்பு வெள்ளிக்கிழமை நீதி கேட்டு ஆயிஷா 3 மாத கைக்குழந்தையுடன் உறவினர்களுடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வனஜா மற்றும் காவல்துறையினர், இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிஷா மற்றும் உறவினர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.