நெல்லை மாவட்டத்தின் திசையன்விளை அருகேயுள்ள செல்வமருதூரைச் சேர்ந்த தங்கதுரையின் மகன் ராஜேந்திரன் (22). இவர், தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்துவந்தார். கடந்த அக் 9ம் தேதியன்று குலசேகரபட்டினம் கோவிலுக்குச் சென்றுவருவதாக சொல்லிச் சென்றவர் பின் வீடு திரும்பவில்லையாம். உறவினர்கள் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லையாம்.
இதுகுறித்து அக். 21 அன்று அவரது தாய் சுமதி திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார். வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலீசாரின் விசாரணையிலிருக்கிறது. இந்தச் சூழலில் உவரி போலீசார் நேற்று ஒரு வழக்கு தொடர்பாக திசையன்விளையைச் சேர்ந்த ஒரு வாலிபரைப் பிடித்து விசாரணை நடத்தியதில், மாயமான ராஜேந்திரனை தட்டார்மடம் பக்கமுள்ள எம்எல்தேரியில் கொன்று புதைத்ததாகத் தெரிவிக்க அதிர்ந்து போன போலீசார் மேலும் விசாரிக்க, இதில் திசையன்விளையைச் சேர்ந்த 3 சிறுவர்களுக்கும் தொடர்பிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.
போலீசார் மூன்று சிறுவர்களையும் பிடித்து விசாரணை நடத்தியதுடன் ராஜேந்திரனைப் புதைத்த எம்எல்தேரி பகுதிக்கு அழைத்துவர அவர்கள் அடையாளம் காட்டியுள்ளனர். பின்னர் வள்ளியூர் டி.எஸ்.பி. யோகேஸ்குமார், திசையன்விளை இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ், சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா முன்னிலையில் ராஜேந்திரனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே அரசு டாக்டர் மூலம் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது.
8, 10, 12ஆம் வகுப்புகள் பயிலும் அந்த சிறுவர்களிடம் விசாரணை நடத்தியதில், ராஜேந்திரனும், 16 வயது சிறுவனும் ஒரே பெண்ணைக் காதலித்து வந்துள்ளனர். இந்தக் காதல் போட்டி தொடர்பாக இவர்களுக்குள் தகராறு ஏற்பட அந்த 16 வயது சிறுவன் தனது நண்பர்களான 15 வயதுடைய இருவருடன் சேர்ந்து ராஜேந்திரனை அக். 9 அன்று ஆள் நடமாட்டமில்லாத தட்டார்மடம் எம்எல்தேரிக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். ஏற்கனவே மது, கஞ்சாவுக்கு அடிமையான இந்த 4 பேரும் சேர்ந்து மது அருந்தியிருக்கிறார்களாம். அப்போது காதல் விவகாரம் தொடர்பாக இவர்களுக்குள் தகராறு ஏற்பட சிறுவர்கள் மூன்று பேரும் சேர்ந்து ராஜேந்திரனை வெட்டிக் கொன்று உடலைப் புதைத்துள்ளது தெரியவந்திருக்கிறது. சம்பவம் தொடர்பாக போலீசார் அவர்களிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
16 வயது சிறுவர்கள் நடத்திய கொலைபாதகம் ஏரியாவில் திகிலைக் கிளப்பியுள்ளது.