சேலத்தில், சாதியால் காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் விரக்தி அடைந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயல, அவர் மிச்சம் வைத்திருந்த விஷத்தை காதலனும் குடித்ததால் இருவரும் உயிருக்குப் போராடி வருகின்றனர்.
சேலம் அருகே உள்ள உடையாப்பட்டியைச் சேர்ந்தவர் மோகனா (18, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரும், உடையாப்பட்டியை அடுத்த மாசிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (20) என்பவரும் தீவிரமாக காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள். மகளின் காதல் விவகாரம் பெற்றோருக்கு அரசல் புரசலாக தெரிய வந்தபோதே, அவருக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர். மேலும், சாதியைக் காரணம் காட்டியும் பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் தனது காதல் கைகூடாது என்று எண்ணிய மோகனா, தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப். 2) மாலை பாறைக்காடு என்ற இடத்தில் வைத்து விஷம் குடித்தார். இதுகுறித்து காதலன் கோபாலகிருஷ்ணனுக்கும் செல்போன் மூலம் தகவல் கொடுத்தார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், காதலியைத் தேடி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்.
அங்கே காதலி குடித்துவிட்டு மிச்சம் வைத்திருந்த விஷத்தை எடுத்து அவரும் குடித்தார். பின்னர் என்ன நினைத்தாரோ அவர், மோகனாவை அவருடைய வீட்டிற்கு கொண்டு சென்றார். அங்கே அவர், நாங்கள் உயிருடன் இருந்தால்தான் உங்களால் பிரிக்க முடியும். சாவில் எங்களை யாராலும் பிரிக்க முடியாது என்று கூறி, விஷம் குடித்த விவரத்தையும் சொன்னார். பின்னர் சிறிது நேரத்தில் இருவருமே அங்கேயே மயங்கி விழுந்தனர்.
இதையடுத்து பெண்ணின் வீட்டார், அவர்கள் இருவரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து அம்மாபேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.