தமிழகத்தில் தாமரை இனிதே மலரும்:
சேப்பாக்கத்தில் பாஜக ஆர்ப்பாட்டம்!
தமிழக அரசு நடத்திவரும் டாஸ்மாக்கை மூடக்கோரியும், உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கோரியும் சென்னையில் பாஜக இளைஞர் அணி சார்பில் கோட்டையை நோக்கி பேரணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் சேப்பாக்கம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தமிழக பா.ஜ.க. பொறுப்பாளர் முரளிதரராவ், தேசிய செயலாளர் எச்.ராஜா, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாஜகவின் இளைஞரணியின் தேசிய செயலாளரும், எம்.பி.யுமான பூனம் மகாஜன் பேசும்போது, ‘பா.ஜ.க. ஆட்சி மலர்ந்தால்தான், தமிழக மக்களின் கனவுகள் நிறைவேறும். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, தமிழக அரசுடன் இணைந்து சுமுகமாக செயல்படுகிறது. மீனவர்கள் உள்பட தமிழக மக்களின் அனைத்து பிரச்சனைகளையும் உன்னிப்பாக கவனித்து, அதனை தீர்த்து வருகிறார் பிரதமர் மோடி. விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது. இதேபோல மீனவர்களுக்கு அதிக நிதி ஒதுக்கி, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியுள்ளது. இன்னும் ஏராளமான அப்துல் கலாம்கள் தமிழகத்தில் உருவாகவேண்டும். தமிழகத்தில் இலைகள் உதிர்ந்து, சூரியன் மறைவதால் தமிழகத்தில் தாமரை மலரப்போகிறது. சித்தாந்தத்தின்படி பணியாற்றுபவர்களுக்கான கட்சி பா.ஜ.க. மட்டுமே.
மோடியின் கனவான புதிய பாரதத்தை அனைவரும் இணைந்து படைக்கவேண்டும். அதற்கான ஊக்கம் இளைஞர்களிடம் இருக்கவேண்டும். மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் குண்டு துளைக்காத காரில் செல்லும் ராகுல் காந்தி, குஜராத் மாநிலத்துக்கு சாதாரண காரில் சென்றது ஏன்? இதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது’ என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழக பாஜக தலைவர் தமிழிசை, தேசிய செயலாளர் எச்.ராஜா, சி.பி.ராதா கிருஷ்ணன் ஆகியோர் ஆளும் தரப்பு அதிமுகவை விட திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியையே தாக்கி பேசினார்கள்.
தமிழகம் முழுவதிலும் இருந்து இளைஞர் அணியினர், மகளிரணியினர் என ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டம் நிறைவடைந்ததும், தமிழிசை சவுந்தரராஜன் உள்பட நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில் முதல்வரைச் சந்தித்து மனு கொடுக்க சென்றனர்.
- சி.ஜீவாபாரதி