சிதம்பரம் மேலவீதி பேருந்து நிழற்குடை அருகே உள்ள கட்டிடத்தில் அலுவலகம் போல் மேஜை, நாற்காலி ஆகியவற்றை எல்லாம் கொண்டு மூன்றுக்கும் மேற்பட்டோர், அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பதாகவும்,கூலி வேலை செய்பவர்கள் தொடர்ந்து வாங்குவதாகவும் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
ஆனால், காவல்துறை இது குறித்து எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இந்த நிலையில் மேல வீதியில் திங்கள் கிழமை காலை 50-க்கும் மேற்பட்டோர் அந்த கட்டடத்தின் உள்ளே சென்று தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டை பதிவு செய்தவாறு இருந்தனர். அதேசமயம், லாட்டரி சீட் விற்பனை செய்யும் இடத்தில் இருந்து சற்று தள்ளி காவல்துறையினர் நிழற்குடை அமைத்து காவல் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இது குறித்து காவல்துறையில் கேட்டால் அப்படி ஒன்றும் இல்லை என்பதே அவர்களின் பதிலாக உள்ளது. இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். ஏழை எளிய மக்களின் தினந்தோறும் வாழ்க்கையை சீரழிக்கும் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையை சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு தடை செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.