கடலூர் மாவட்டம், கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 21 ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் அ.தி.மு.கவைச் சேர்ந்த மேனகா விஜயகுமார் ஒன்றியக் குழு தலைவராகவும், முனுசாமி துணைத் தலைவராகவும் உள்ளனர். கடந்த மாதம் கவுன்சிலர்கள் 15 பேர் விருத்தாசலம் கோட்டாட்சியர் ராம்குமாரிடம், 'தன்னிச்சையாக செயல்படும் தலைவர் மற்றும் துணைத் தலைவர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர வேண்டும்’ என மனு அளித்தனர்.
இந்த நிலையில், ஒன்றிய கவுன்சிலர் கிரகோரி தலைமையிலான 13 கவுன்சிலர்கள் நேற்று கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் அரங்கநாதனிடம் பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர். அதில், 'நாங்கள் 15 கவுன்சிலர்கள் கடந்த 24.1.2022 அன்று சேர்மன், துணைச் சேர்மன் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர மனு அளித்தோம். ஆனால் 16.02.2022 அன்று மகாலட்சுமி சிவக்குமார் மற்றும் சங்கீதா தனசேகரன் ஆகிய இருவரும் நம்பிக்கை தீர்மானத்தை வாபஸ் பெற்றதாக தாங்கள் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளீர்கள். மேற்கண்ட இரண்டு கவுன்சிலர்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்து வாபஸ் பெற வைத்துள்ளனர். மீதமுள்ள 13 கவுன்சிலர்களை சேர்மேன், துணை சேர்மன் மிரட்டி வருகின்றனர். எங்கள் அனைவருக்கும் பல்வேறு அச்சுறுத்தல்கள் தினமும் வருகிறது. எனவே எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். மேலும் தாங்கள் குறிப்பிட்டுள்ள 13.3.2022 அன்று எங்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே வேப்பூர் வட்டம், நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் 21 ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளனர். ஒன்றிய குழு தலைவராக பா.ம.கவை சேர்ந்த செல்வி ஆடியபாதம், துணைத்தலைவராக அ.தி.மு.கவை சேர்ந்த ஜான்சிமேரி தங்கராஜ் உள்ளனர். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் தலைவர் மற்றும் துணைத் தலைவர் மீது தி.மு.க ஒன்றிய கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர கோரி விருத்தாசலம் கோட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர். அதில் பெரும்பான்மையான கவுன்சிலர்கள் ஆதரவு இல்லாததால் நம்பிக்கை கோரும் தீர்மானம் நீதிமன்ற உத்தரவுபடி கைவிடப்பட்டது.
இந்த நிலையில் நேற்று ஒன்றிய கவுன்சில் கூட்டம் ஒன்றிய தலைவர் செல்வி தலைமையில் நடைபெற்றது. இதில் 20 கவுன்சிலர்கள் பங்கேற்றனர். தி.மு.கவை சேர்ந்த கவுன்சிலர் மனோன்மணி மட்டும் பங்கேற்கவில்லை. இந்த கூட்டத்தில் தி.மு.க கவுன்சிலர் வரம்பனூர் சிவகுமாருக்கும் ஒன்றிய தலைவர் செல்விக்கும் வரவு, செலவு நிதி அறிக்கை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தி.மு.க, மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட 11 பேரும் வெளிநடப்பு செய்தனர்.