நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31ஆம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான இந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று உரையாற்றினார். இதையடுத்து, இரண்டாம் நாளான நேற்று (01-02-25) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய அரசின் 2025 - 2026ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம், பகுதிநேர பணியாளர்களுக்கு அடையாள அட்டை, இல்லங்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டமான ஜல்ஜீவன் திட்டம் நீட்டிப்பு, 5 ஆண்டுகளில் 5 லட்சம் பெண் தொழில் முனைவோரை உருவாக்க புதிய திட்டம் என்ற பல அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கென தனி அறிவிப்பும் எதுவும் வெளியிடவில்லை என்று கூறி எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகரும், பா.ஜ.கவைச் சேர்ந்தவருமான சரத்குமார் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “மத்திய பட்ஜெட் சிறப்பான மற்றும் நடுத்தர மக்களின் முன்னேற்றத்துக்கு உருவாக்கப்பட்ட பட்ஜெட். முதல் மாநாட்டில் ஆளுநர் பதவி தேவையில்லை என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பேசினார். ஆனால் அதன் பின்னர் விஜய், ஆளுநரை நேரில் சென்று பார்த்தார். அதனால், விஜய் அவரது கொள்கையில் முரண்பட்டிருக்கிறார். பேசுவது எதுவாயினும் அதை நன்றாக யோசித்து பேச வேண்டும் என்பதே விஜய்க்கு நான் வழங்கும் அறிவுரை” என்று கூறினார்.