இந்தாண்டு ஐசிசியின் 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டி கடந்த ஜனவரி 18ஆம் தேதி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், இந்தியா, நியூசிலாந்து, மலேசியா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஸ்காட்லாந்து, இலங்கை, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், நைஜீரியா, சமோவா, நேபாளம் ஆகிய அணிகள் பங்கேற்றன.
மலேசியாவில் நடைபெற்ற இந்த தொடரில், தென்னாப்பிரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 4 அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. அதனை தொடர்ந்து, இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்தியாவும், ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்காவும், இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இந்த நிலையில், இன்று (02-02-25) மலேசியாவில் இந்திய அணிக்கு, தென்னாப்பிரிக்க அணிக்கும் இடையே இறுதிப்போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதில், தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 10 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் மட்டும் எடுத்தது. இந்திய அணி 83 ரன்கள் எடுத்தால் தொடரை கைப்பற்றலாம் என்ற இலக்கை தென்னாப்பிரிக்கா அணி நிர்ணயித்தது.
அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் நிக்கி பிரசாத் தலைமையிலான இந்திய அணி, பேட்டிங் செய்தது. அதில் களமிறங்கிய கமலினி 13 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து வந்த கொங்காடி திரிஷா, 33 பந்துகளில் 8 பவுண்டரி அடித்து 44 ரன்கள் எடுத்தும், சனிகா ஷால்கே 22 பந்துகளில் 4 பவுண்டரி அடித்து 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி சார்பாக வெறும் 3 பேர் மட்டுமே பேட்டிங் செய்து 11.2 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்து தொடரை கைப்பற்றினர். இதன் மூலம், 19 வயதுக்குட்ப்பட்டோர் மகளிர் டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தை இந்தியா வென்றுள்ளது.