கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பேரூராட்சிக்கு உட்பட்ட ஓமாம்புலியூர் ரோடு பகுதியில் வசிப்பவர் 16வது வார்டு திமுக பேரூராட்சி மன்ற உறுப்பினர் விஜயலட்சுமி. இவரது கணவர் தாமோதர கண்ணன்(55). இவர் சனிக்கிழமை இரவு, தஞ்சை மாவட்டம் வல்லம் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் தனது மகள் மினிஷா(19) என்பவரைப் பொங்கல் விடுமுறையை ஒட்டி அழைத்து வர, அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியிலிருந்து மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு காட்டுமன்னார்கோவில் நோக்கி வந்தார்.
அப்போது காட்டுமன்னார்கோவிலில் இருந்து ஷண்டன் கிராமத்தைச் சேர்ந்த கவிதாஸ் மற்றும் பின்னால் அமர்ந்திருந்த அதே ஊரைச் சேர்ந்த அவரது நண்பர் விக்கி ஆகிய இருவரும் ஷண்டன் கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் வீரானந்தபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக இரு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதியதில் நான்கு பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே தாமோதர கண்ணன் (வயது 55) மற்றும் மற்றொரு மோட்டார் பைக் ஓட்டி வந்த கவிதாஸ்(21) ஆகிய இருவரும் பரிதாபமாக இறந்தனர்.
மேலும் காயமடைந்த தாமோதரனின் மகள் மற்றும் மற்றொரு மோட்டார் பைக்கில் பின்னால் அமர்ந்து வந்த விக்கி(19) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காட்டுமன்னார்கோவில் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் சடலங்களைக் கைப்பற்றி காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயமடைந்த மினிஷா மற்றும் விக்கி ஆகிய இருவரையும் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.