திருச்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக விளங்குவது ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். இந்தக் கோரிக்கையினைக் கடந்த 2021ஆம் தேர்தல் வாக்குறுதியாக திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட்ட கே.என். நேரு வாக்குறுதியாக கொடுத்திருந்தார். தற்போது அதற்கான பணிகள் மிக வேகமாக முடிக்கப்பட்டுள்ளது.
திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பஞ்சப்பூர் அருகே சுமார் 50 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது பணிகள் தீவிரமடைந்துள்ளன. திருச்சி நகரப் பகுதிக்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில்கொண்டு ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைத்தால் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் நகரப் பகுதிகளுக்கு நுழைய வேண்டிய தேவைகள் இருக்காது. இதனால் புறநகர் பகுதியிலேயே பயணிகளை இறக்கிவிட்டு அங்கிருந்து உடனடியாக வெளியேறுவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதைப் பொதுமக்கள் தொடர்ந்து முன்வைத்துவந்தனர்.
எனவே மாநகராட்சிக்கு சொந்தமாக உள்ள 570 ஏக்கர் நிலத்தில் நான்கில் ஒரு பகுதி மட்டும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் திறந்து விடப்பட்டுவருகிறது. இந்நிலையில் மாநகராட்சிக்கு சொந்தமான அதே இடத்தில் 50 ஏக்கர் நிலத்தை தற்போது ஒதுக்கீடு செய்து அதை சரி செய்யும் பணியை மாநகராட்சி தொடங்கியுள்ளது.